விரைவில் முடிகிறதா ராமாயணம்?
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ராமாயணம் தொடர் விரைவில் நிறைவடையவுள்ளதாக சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்படுகின்றன.
எனினும், இத்தொடரின் இறுதிக்கட்டத்துக்கு இன்னும் பல எபிஸோடுகள் நிலுவை உள்ளதாகவும் விரைவில் முடிய வாய்ப்பில்லை எனவும் சிலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
சன் தொலைக்காட்சியில் புதிதாக தங்க மீன்கள் என்ற தொடர் ஒளிபரப்பாக உள்ளதாகவும், இதற்காக ராமாயணம் தொடரை விரைந்து முடிப்பதாகவும் கூறப்படுகிறது.
பூவே பூச்சூடவா, கிழக்கு வாசல், நெஞ்சத்தைக் கிள்ளாதே உள்ளிட்டத் தொடர்களில் நடித்து புகழ் பெற்ற ரேஷ்மா முரளிதரன், தங்க மீன்கள் தொடரில் நாயகியாக நடிக்கிறார். இதேபோன்று சுந்தரி தொடரில் நடித்து புகழ் பெற்ற ஜிஷ்ணு மேனன் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
தங்க மீன்கள் தொடரில் முன்னணி நடிகர்கள் பலர் நடிப்பதால், பிரைம் டைம் எனப்படும் முக்கிய நேரத்தில் ஒளிபரப்ப திட்டமிடப்படுவதாகக் கூறப்படுகிறது.
எனினும், இதிகாசத்தை மையப்படுத்தி ஒளிபரப்பாகிவரும் ராமாயணத்துக்கு வாடிக்கையான ரசிகர்கள் பலர் உள்ளதால், தங்க மீன்கள் தொடருக்கு பதிலாக ராமாயணத்தை விரைந்து முடிப்பதா? எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதற்கு முன்பு பலமுறை ராமாயணம் தொடர் ஒளிபரப்பப்பட்டு இருந்தாலும், ஒவ்வொரு முறை ஒளிபரப்பாகும்போது அதற்காக தனி ரசிகர் கூட்டம் உருவாகிறது. டிஆர்பி பட்டியலில் பல புதிய தொடர்களை பின்னுக்குத் தள்ளி, ராமாயணம் முன்னணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | ரேஷ்மா முரளிதரனின் தங்க மீன்கள் தொடர் ஒளிபரப்பு நேரம் அறிவிப்பு!