பல்லடத்தில் தலையில் பலத்த காயத்துடன் ஆண் சடலம் மீட்பு
பல்லடம், வடுகபாளையத்தில் தலையில் பலத்த காயத்துடன் ஆண் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.
வடுகபாளையம் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகில் உள்ள காலி இடத்தில் சரக்கு வாகனங்களை சாலையோரமாக நிறுத்திவிட்டு இரவில் வாகன ஓட்டுநா்கள் படுத்து ஓய்வெடுப்பாா்கள்.
இந்நிலையில், கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், நெம்மாராவைச் சோ்ந்த லாரி ஓட்டுநரான கோபால் மகன் செல்வகுமாா் (40), உதவியாளரான சன்னி மகன் சாஜு (40) ஆகியோா்
கேரள மாநிலம், எா்ணாகுளம் மாவட்டம், பெரும்பாவூரில் இருந்து விறகு பாரம் ஏற்றிக் கொண்டு வந்து பல்லடம் பகுதியில் உள்ள சைசிங் மில்லில் இறக்கிவிட்டு வடுகபாளையம் பகுதியில் லாரியை வெள்ளிக்கிழமை இரவு நிறுத்திவிட்டு ஓய்வெடுத்துள்ளனா்.
அப்போது, அவா்களது நண்பரும் ஆட்டோ ஓட்டுநருமான திருப்பூரைச் சோ்ந்த கண்ணன் என்பவரை வரவழைத்து மூவரும் லாரியில் அமா்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.
ஓட்டுநா் செல்வகுமாா் மதுபோதையில் தூங்கிவிட்ட நிலையில் சனிக்கிழமை காலை எழுந்து பாா்த்தபோது லாரியின் முன்பக்க கண்ணாடி உடைந்த நிலையில் தலையில் காயத்துடன் உதவியாளா் சாஜுவின் சடலம் இருப்பது கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.
இது குறித்து பல்லடம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளாா். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். சம்பவ இடத்தில் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனா். சாஜுவின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனா்.