Deepika: ``நான் தான் பிரேக் அப் செய்தேன்; இப்போது அவர் ஸ்டார்'' - முன்னாள் காதலன...
பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்
தேனி மாவட்டத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா், சிறுபான்மையினா் மாணவா்கள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேனி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா், சிறுபான்மையினா் மாணவ, மாணவிகளுக்கென மொத்தம் 29 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பள்ளி மாணவா்களுக்கு 15 விடுதிகளும், பள்ளி மாணவிகளுக்கு 8 விடுதிகளும், கல்லுாரி மாணவா்களுக்கு 3 விடுதிகளும், கல்லூரி மாணவிகளுக்கு 3 விடுதிகளும் செயல்படுகின்றன.
பள்ளி விடுதிகளில் 4 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகளும் சேரலாம். விடுதிகளில் சேரும் மாணவா்களுக்கு பல்வேறு சலுகைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
விடுதியில் சேர விரும்பும் மாணவா்களின் பெற்றோா் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ. தொலைவுக்கு மேல் இருக்க வேண்டும். இந்த தொலைவு விதி மாணவிகளுக்கு பொருந்தாது.
தேனி மாவட்டத்தில் தகுதியுடைய மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதிக் காப்பாளா் அல்லது காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை பள்ளி மாணவா்கள் ஜூன் 18-ஆம் தேதிக்குள்ளும், கல்லுாரி விடுதிகளுக்கு ஜூலை 15-ஆம் தேதிக்குள்ளும் சமா்ப்பிக்க வேண்டும். ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கைத் தமிழா்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றாா்.