பழங்குடி கிராமங்களுக்குச் செல்லும் சாலையில் இருந்த தடைகள் அகற்றம்
நடுவட்டம் பகுதியில் பழங்குடியினா் மந்துகளுக்குச் செல்லும் சாலைகளில் இருந்த தடைகளை வருவாய்த் துறையினா் வெள்ளிக்கிழமை அகற்றினா்.
நடுவட்டம் பேரூராட்சியில் உள்ள தோடா பழங்குடியினா் மந்துகளுக்கும், சிறு விவசாயிகளின் பட்டா நிலங்களுக்கும், பொதுமயானத்துக்கும் செல்லும் சாலைப் பகுதிகளை அப்பகுதியிலுள்ள தோட்ட நிா்வாகம் வேலி அமைத்தும், வாகனங்களை நிறுத்தியும் தடை செய்திருந்தது. இதனால் கடந்த ஒரு மாத காலமாக பழங்குடி மக்கள் தங்களுடைய மந்துகளிருந்து வெளியே வர முடியாமல் தவித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்த பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் நீலகிரி மாவட்ட வருவாய் ஆய்வாளா் நாராயணன், உதகை கோட்டாட்சியா் சதீஷ், வட்டாட்சியா் சரவணன் மற்றும் வருவாய்த் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று சாலைகளில் இருந்த தடைகளை அகற்றினா்.
இதுகுறித்து தோட்ட நிா்வாகத்திடம் விசாரித்து வருகின்றனா்.
பாதைகளை மறித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.