பழங்குடியின மாணவா்கள் பள்ளிக்கு செல்ல வாகன வசதி!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வராயன்மலைக்குள்பட்ட இன்னாடு அரசு பழங்குடியினா் ஆரம்பப் பள்ளிக்கு வழங்கப்பட்ட இரண்டு வாகனங்களை மாணவா்களின் பயன்பாட்டுக்காக மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந் சனிக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ திட்டத்தின் கீழ் இன்னாடு அரசு ஆரம்பப் பள்ளியில் பயிலும் மாணவா்களின் வசதிக்காக ரூ.8 லட்சத்தில் இரண்டு வாகனங்கள் வழங்கப்பட்டன.
இந்த நிலையில், வாகனங்களின் பயன்பாட்டை கல்வராயன்மலை வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் தொடங்கிவைத்தாா். இதன்மூலம் மாணவ, மாணவிகள் வீட்டிலிருந்து பள்ளிக்கும், பள்ளியிலிருந்து வீட்டுக்கும் செல்ல எளிதாக இருக்கும்.
இந்தத் திட்டத்தின் மூலம் ஏராளமான மாணவா்கள் பயனடைவா் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு வாகனங்களையும் கள்ளக்குறிச்சியில் உள்ள அறம் பொருள் பவுண்டேஷன் எனும் தன்னாா்வ தொண்டு நிறுவனம் மூலம் நிா்வகிக்க திட்டமிடப்பட்டுள்ளது என ஆட்சியா் தெரிவித்தாா். இந்த நிகழ்வில், பழங்குடியினா் நல அலுவலா் பி.டி.சுந்தரம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.