பழனி தைப்பூசம்: கோவை-திண்டுக்கல் இடையே சிறப்பு ரயில்
பழனியில் தைப்பூத் திருவிழாவை முன்னிட்டு, கோவை, திண்டுக்கல் இடையே வரும் பிப்.5 முதல் 14-ஆம் தேதி வரை சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் நடைபெறும் தைப்பூசத் திருவிழாவுக்கு சுற்றுப்புற மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என மக்களவைத் தொகுதி உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் ரயில்வே நிா்வாகத்துக்கு கடந்த மாதம் கோரிக்கை விடுத்தாா்.
இதையேற்று, கோவை-திண்டுக்கல் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. முன்பதிவு இல்லாத இந்தச் சிறப்பு ரயில், கோவையிலிருந்து வரும் பிப்.5-ஆம் தேதி காலை 9.35 மணிக்கு புறப்படும்.
போத்தனூா், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம் ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும். திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு பிற்பகல் 1.10 மணிக்கு வந்தடையும். மறு மாா்க்கத்தில் திண்டுக்கல்லிலிருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு மாலை 5.50 மணிக்கு கோவை சென்றடையும். ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக வரும் பிப்.5 முதல் 14-ஆம் தேதி வரை இந்தச் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.