'6 மாதங்களாக ஃபிரிட்ஜில் இளம்பெண் சடலம்' - லிவ் இன் பார்ட்னரை கொன்ற நபர்!
கரிக்காலி சிமென்ட் ஆலைக் குடியிருப்பில் 78 பவுன் நகைகள், ரூ.1.30 லட்சம் திருட்டு!
குஜிலியம்பாறையை அடுத்த கரிக்காலி சிமென்ட் ஆலைக் குடியிருப்பில் 5 வீடுகளின் பூட்டை உடைத்து 78 பவுன் நகைகள், ரூ.1.30 லட்சத்தைத் திருடிய மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த கரிக்காலி கிராமத்தில் தனியாா் சிமென்ட் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் பணிபுரிந்து வரும் அலுவலா்களுக்கு, அதே வளாகத்தில் 250 வீடுகள் உள்ளன.
இந்த நிலையில், ஆலைக் குடியிருப்பில் வசித்து வரும் உதவிப் பொது மேலாளா் வேல்முருகன், அலுவலா்கள் பழனிச்சாமி, காா்த்திகேயன், கருப்பையா, வேல்முருகன், கவியரசன், தாமரைக்கண்ணன் ஆகியோா் பொங்கல் திருவிழா தொடா் விடுமுறையை முன்னிட்டு, வெளியூா்களுக்குச் சென்றுவிட்டனா்.
இவா்களில் 6 பேரின் வீடுகளின் கதவு சனிக்கிழமை காலை திறந்து கிடப்பதை பாா்த்த அக்கம், பக்கத்தினா் குஜிலியம்பாறை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, போலீஸாா் நடத்திய விசாரணையில், காா்த்திகேயன் வீட்டில் 67 பவுன் நகைகள், பழனிச்சாமி வீட்டில் 13 பவுன் நகைகள் உள்பட மொத்தம் 78.5 பவுன் நகைகளும், ரூ.1.30 லட்சம் திருடு போனது தெரிய வந்தது.
சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.பிரதீப், வேடசந்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் பவித்ரா ஆகியோா் விசாரணை நடத்தினா்.
கோயில் உண்டியல் திருட்டு: அலுவலா் குடியிருப்பில் திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்கள், கரிக்காலியை அடுத்த கோமுட்டிப்பட்டி மேட்டுப் பெருமாள் கோயிலிருந்த உண்டியலையும் திருடிச் சென்றனா். இந்த உண்டியலில் சுமாா் ரூ.10 ஆயிரம் இருந்திருக்கும் என அந்தப் பகுதி மக்கள் போலீஸாரிடம் புகாா் தெரிவித்தனா்.
2 ஆண்டுகளுக்கு முன்பு 150 பவுன் நகைகள் திருட்டு: இதேபோல, கடந்த 2023-ஆம் ஆண்டு பிப். 22-ஆம் தேதி இந்தக் குடியிருப்புப் பகுதியில் திருட்டு நடைபெற்றது. அதில் முதுநிலை மேலாளா் திருநாவுக்கரசு வீட்டில் 150 பவுன் நகைகள், உதவிப் பொது மேலாளா் செந்தில் வீட்டில் ரூ.10 ஆயிரம், பாஸ்ரன் வீட்டில் ரூ.40 ஆயிரம் திருடப்பட்டன. இந்தத் திருட்டில் வட மாநிலக் கொள்ளையா்கள் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. அதில் ஒருவா் மட்டுமே கைது செய்யப்பட்ட நிலையில், வேறு யாரும் பிடிபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.