பஹல்காம்: காங்கிரஸின் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடர் கோரிக்கைக்கு பவார் ஆதரவு!
பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்கச் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நடத்த வேண்டும் என்ற காங்கிரஸின் கோரிக்கையை தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் ஆதரித்துள்ளார்.
தாணேவில் நிகழ்ந்த கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்ட பிறகு சரத் பவார் செய்தியாளர்களுடன் பேசினார்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் படுகொலை செய்யப்பட்டதை நாட்டின் மீதான தாக்குதல் என்றே கருதப்படுகிறது. இந்தப் பிரச்னையில் முழு நாடும் ஒன்றுபட்டுள்ளது. அனைத்துக் கட்சிகளும் நாடாளுமன்றமும் ஒன்றுபட்டுள்ளன.
இந்தச் செய்தியை உலகிற்கு அனுப்ப, பஹல்காம் பற்றிய ஒரு சிறப்பு அமர்வு பயனுள்ளதாக இருக்கும் என்று பவார் கூறினார்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விவாதிக்கவும், கூட்டுத் தீர்மானத்தை வெளிப்படுத்தவும் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டுமாறு பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கடிதம் எழுதியுள்ளனர்.
ஏப்ரல் 22 அன்று தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பிரபலமான சுற்றுலா நகரமான பஹல்காம் அருகேயுள்ள புல்வெளியில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் கொல்லப்பட்டனர், இதில் பெரும்பாலானோர் சுற்றுலாப் பயணிகள் ஆவார்.