பாகிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு! உயிரிழப்பு 300-ஐ கடந்தது!
பாகிஸ்தானின் வடக்கு பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் இதுவரை 307 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பல மாவட்டங்களில் தொடர் மழை மற்றும் மேக வெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் இதுவரை(சனிக்கிழமை(ஆக. 16) மாலை நிலவரப்படி), 13 குழந்தைகள், 15-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட கடந்த 48 மணி நேரத்தில் மொத்தம் 307 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.
இந்தநிலையில், அப்பகுதிகளில் ஆக. 21 வரை மழை தொடரும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கலக்கத்தில் உள்ளனர். இந்த மழை பாதிப்புகளில் மொத்தம் 74 வீடுகள் சேதமடைந்துள்ளன. அப்பகுதிகளில் மீட்புக் குழுக்கள் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.