செய்திகள் :

பாக்கெட்டில் அடைத்து ரேஷன் பொருட்கள் விற்பனை: சேலம் சீரங்கபாளைய மக்கள் வரவேற்பு

post image

சேலம்: சேலம் சீரங்கபாளையத்தில் உள்ள ரேஷன் கடையில், ரேஷன் பொருட்கள் பாக்கெட்டில் அடைத்து, விற்பனை செய்யப்படுவது, மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழக அரசு, ரேஷன் பொருட்களை பாக்கெட்டில் அடைத்து, ரேஷன் அட்டைதாரர்களுக்கு விற்பனை செய்யும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதன் முன்னோட்டமாக, சேலம் சீரங்கபாளையத்தில் உள்ள சேலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையில் கடந்த 6 மாதத்துக்கும் மேலாக, ரேஷன் பொருட்கள் பாக்கெட்டில் அடைத்து, ரேஷன் கார்டுதாரர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இது குறித்து நம்மிடம் பேசிய கூட்டுறவு மற்றும் வழங்கல் துறை அலுவலர்கள், “ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்வதற்கு, தமிழக அளவில், சேலம் சீரங்கபாளையம் ரேஷன் கடையில் சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில், சர்க்கரையை அரை கிலோ, ஒரு கிலோ, 2 கிலோ எனவும், பருப்பு 1 கிலோ பாக்கெட்டுகளாகவும் அரிசி 5 கிலோ மற்றும் 10 கிலோ சிப்பமாகவும் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ரேஷன் கடைக்கு பொருட்கள் வந்ததும், கூட்டுறவு சங்க ஊழியர்கள் சிலர் உதவியுடன், ரேஷன் பொருட்களை பாலித்தீன் கவரில் பொட்டலமிட்டு, வைத்து, ரேஷன் கார்டுதாரர்களுக்கு அவற்றை விற்பனை செய்துவிடுவோம். இதனால், ரேஷன் கடையில் மக்கள் காத்திருக்க வேண்டிய தேவை இல்லை. ரேஷன் பொருட்களை எடை போடும்போது, அவை கீழே சிதறி, இழப்பு ஏற்படாது. எடை குறைவு என்ற பிரச்சினை எழவில்லை. இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது” என்றனர்.

சீரங்கபாளையம் ரேஷன் கார்டுதாரர்கள் நம்மிடம், “ ரேஷன் பொருட்களை வாங்குவதற்காக, நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை. எடை போடுபவர்கள், ஒவ்வொரு பொருளாக எடை போடும் வரை காத்திருக்க தேவையில்லை. பொருட்களின் எடை துல்லியமாகவும், சுத்தகமாகவும் இருக்கிறது. சர்க்கரைக்கு ஒரு பை, பருப்புக்கு ஒரு பை என்ற அவசியம் இன்றி, ஒரே பையில் அனைத்துப் பொருட்களையும் எடுத்துச் செல்ல முடிகிறது. இத்திட்டத்தை வரவேற்கிறோம்” என்றனர்.

ரேஷன் பொருட்கள் பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்வது, தமிழக அளவில், சேலத்தில் ஒரு கடையில் மட்டுமே இப்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதை அடுத்து, தமிழகம் முழுவதும் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா ஒரு கடை வீதம் இந்தத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவெடுத்திருப்பது குறிப்பிடத் தக்கது.