பாஜகவின் பிரதிநிதியாக தேர்தல் ஆணையம்! - கார்கே விமர்சனம்
ஆளும் பாஜக அரசின் பிரதிநிதியாக இந்தியத் தேர்தல் ஆணையம் மாறிவிட்டதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக தெரிவித்திருந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி, இன்று(ஆகஸ்ட் 9) தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்களையும் வெளியிட்டார்.
மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் வாக்குத் திருட்டு நடைபெற்றதாகவும் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடைபெற்றதாகவும் ராகுல் காந்தி அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, பிகார் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த அவர், மகாராஷ்டிரத்தை போன்று பிகாரிலும் வாக்குத் திருட்டு நடத்த முயற்சிப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இதற்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “இந்திய தேர்தல் ஆணையம் ஆளும் பாஜக அரசின் பிரதிநிதியாக மாறிவிட்டதாகவும், வாக்குத் திருட்டு விவகாரத்தில் ஜனநாயகத்தை மீட்க வேண்டிய நேரம் இது” என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கார்கே தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.