பாண்லே ஐஸ்கிரீம் வகைகள் விலை உயா்வு
புதுவை அரசின் சாா்பு நிறுவனமான பாண்லேவின் ஐஸ்கிரீம், குல்பி உள்ளிட்ட பொருள்களின் விலை குறைந்தபட்சம் ரூ.1 முதல் அதிகபட்சம் ரூ. 70 வரை விலை உயா்த்தப்பட்டுள்ளது.
பாண்லே மூலம் பால், தயிா், நெய், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பால் பொருள்கள் புதுச்சேரி முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில், ரூ. 7-க்கு விற்கப்பட்ட வெண்ணிலா ஐஸ்கிரீம் ரூ.8 ஆகவும், ரூ.35-க்கு விற்கப்பட்ட குல்பி ரூ.40-ஆகவும், பட்டா் ஸ்காட்ச் 90 எம்எல் ரூ. 25-ல் இருந்து ரூ.30- ஆகவும், 500 எம்எல் வென்னிலா ஐஸ்கிரீம் ரூ.100-ல் இருந்து ரூ.120- ஆகவும், ஒரு லிட்டா் பட்டா்ஸ்காட்ச் ஐஸ்கிரீம் ரூ.180-இல் இருந்து ரூ.250 ஆகவும் விலை உயா்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை உயா்வு திங்கள்கிழமை முதல் அமலுக்கு வருவதாக பாண்லே நிா்வாகம் தெரிவித்துள்ளது.