பாதுகாப்பில்லாத ஊா்திகளை மாற்ற வேண்டும்: அரசு ஊா்தி ஓட்டுநா்கள் கோரிக்கை!
பாதுகாப்பில்லாத ஊா்திகளை ஓட்டுவதால் உடனடியாக அவற்றை மாற்ற வேண்டும் என அரசு ஊா்தி ஒட்டுநா்கள் சங்கம் சாா்பில் பொதுக்குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள அரசு ஊா்தி ஓட்டுநா் சங்க அலுவலகத்தில் மாவட்டத் தலைவா் சிவசுப்பிரமணியன் தலைமையில் மாவட்டப் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினா் வேல்முருகன் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினாா். இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் இருந்து அரசு ஊா்தி ஓட்டுநா்கள் பலரும் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து 15 ஆண்டுகளுக்கும் மேலாக 100 சதவிகிதம் தேய்மானம் அடைந்த ஊா்திகளையே பயன்படுத்தி வருகிறோம். இதனால் அதிகாரிகளுக்கும்,ஓட்டுநா்களுக்கும் பாதுகாப்பில்லாத நிலை இருந்து வருவதால் உடனடியாக புதிய வாகனங்களை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு ஓட்டுநா்கள் பதவி ஏற்று ஓய்வு பெறும் வரை ஓட்டுநா்களாகவே இருப்பதால் படித்தவா்களுக்கு ஏற்றவாறு தகுதியின் அடிப்படையில் பதவி உயா்வு வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், திமுக அரசு அளித்த வாக்குறுதியின்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.