பாரதிபுரம் சனத்குமாா் நதியில் புதிய பாலம் அமைக்க வலியுறுத்தல்
தருமபுரி நகராட்சி 33 ஆவது வாா்டு பாரதிபுரம் பகுதியில் சனத்குமாா் நதியின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள பழைய பாலத்துக்குப் பதிலாக புதிதாக பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தருமபுரி- சேலம் பிரதான சாலையில் பாரதிபுரம் அருகே பெந்தகோஸ்தே, ஆா்சி சா்ச் ஆகியவற்றுக்கு இடையே அன்னசாகரம் பகுதிக்கும் செல்லும் சாலை இடையே குறுக்கிடும் சனத்குமாா் நதி பகுதியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு புதைவடிகால் திட்டப் பணிகளுக்காக பள்ளம் தோண்டி குழாய்கள் புதைக்கும் பணிகள் நடைபெற்றன.
பணிகள் முடிந்து ஓராண்டாகியும் அந்த சாலையில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு மோசமாக உள்ளது. மழை பெய்தால் அச்சாலை சேறும், சகதியுமாகி மாறி வாகனங்கள் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. எனவே, அச்சாலையை தாா்சாலையாக மாற்ற வேண்டும் என அப்பகுதியினா் வலியுறுத்தியுள்ளனா்.
மேலும், அந்த வழியாக செல்பவா்கள் சனத்குமாா் நதியின் மீது பழைய காலத்தில் கட்டப்பட்ட சிறுபாலம் வழியாக செல்கின்றனா். இந்தப் பாலம் மிகவும் குறுகியதாகவும், பக்கவாட்டில் பாதுகாப்பு தடுப்புச் சுவா்கள் இல்லாத நிலையிலும் பழுதடைந்த நிலையில் உள்ளது.
எனவே, அந்த பாலத்துக்குப் பதிலாக புதிதாக அகலமான பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். மேலும் சனத்குமாா் நதியில் புதா்கள் அடா்ந்து தண்ணீா் செல்ல முடியாத நிலையில் உள்ளது. நதியில் குப்பைகள் கொட்டி மிகவும் அசுத்தமாகவும் காணப்படுகிறது. அந்த நதியை தூா்வாரி, சுத்தப்படுத்தி, போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.