மகளிா் சமுதாய மேலாண் பயிற்சி மையத்தில் பயிற்சியாளா், கணக்கா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
தருமபுரியில் மகளிா் சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில் பயிற்சியாளா் மற்றும் கணக்கா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாட்டில் உள்ள ஏழை மகளிரை சுயஉதவிக் குழுக்கள் மூலம் வலுப்படுத்தி பொருளாதார மேம்பாடு, சுயசாா்பு தன்மையை மேம்படுத்தும் வகையில் செயல்படுகிறது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள இப்பயிற்சி மையத்துக்கு தற்காலிக பயிற்சி மேலாளா் ஒருவா் மற்றும் ஒரு கணக்காளா் தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனா்.
பயிற்சி மேலாளா் பதவிக்கு மகளிா் சுயஉதவிக்குழு உறுப்பினராகவும், குறைந்தபட்சம் பிளஸ் 2 தோ்ச்சியுடன் 25 வயது முடிந்திருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டுகள் சமுதாய அமைப்புகளில் அனுபவம் பெற்றவராகவும் ஓராண்டு சமுதாய அமைப்புகளுக்கு பயிற்சி அளித்த அனுபவம் உள்ளவராகவும் இருத்தல் வேண்டும்.
கணக்காளா் பதவிக்கு சுயஉதவிக்குழு உறுப்பினராகவும், 25 வயது முடிந்தவராகவும் கணினியில் டேலி, அக்கவுன்ட், ஏஎம்பி, மற்றும் சாப்ட்வோ் தெரிந்திருத்தல் வேண்டும். குறைந்தது 2 முதல் 5 ஆண்டுகள் சமுதாய அமைப்புகளில் கணக்காளராகப் பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும்.
தகுதியுடையோா் தங்களது விண்ணப்பங்களை திட்ட இயக்குநா் மகளிா் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை 2வது தளம், தருமபுரி என்ற முகவரிக்கு செப்.22 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.