இந்திய அதிகாரிகளுக்கு ரூ.2,200 கோடி லஞ்சம் - அமெரிக்காவில் அதானி மீது முறைகேடு ப...
பாலய்யா வஸ்தாவய்யா 5: `புலிப்பாண்டி பயங்கரமானவன் தான்! - சிரஞ்சீவியுடன் நடந்த மல்லுக்கட்டு
"அவ்வளவுதான் நம்மள முடிச்சுவிட்டீங்க போங்க!" என்று பாலய்யா ரசிகர்கள் சார்பாக ராயலசீமா ஏரியா கர்நூல் மாவட்டத்திலிருந்து கல்லூரி நண்பன் ராகவேந்திரா பசுப்புலேட்டி போனில் அழைத்தான்.
''தொங்கன குடுக்கா... பாலய்யாவைப் பத்தி நல்ல விஷயமே கண்ணுக்குத் தெரியாதா?'' என்றும் கேட்டான்.
"இருங்க பாய்!" என்று பாலய்யாவின் பாசிட்டிவ் பக்கங்களை லென்ஸ் வைத்து தேடினேன். நிறையவே இருக்கிறது. மூன்று நல்ல விஷயங்களை இந்த எபிசோடு முடிவில் சொல்கிறேன். இனி சிரஞ்சீவியுடன் அவருக்கு இருந்த `லடாய்' பற்றி சொல்கிறேன்.
சென்ற பகுதியில் சொன்னதுபோல சங்ராந்தி ரிலீஸுக்கு இவர்களின் படங்கள் மோதிக் கொண்டபோது ரசிகச் சண்டை உச்சத்தில் இருந்தது. அந்த ஊரில் ரஜினி-கமல் போல அவரவர் ரசிகர் மன்றங்களையும், தங்கள் கேரியரையும் உச்சத்துக்குக் கொண்டு சென்றிருக்கலாம். ஆனால், `குறுக்கே இந்த கௌஷிக் வந்தா...' என்பதுபோல் நடிகர் வெங்கடேஷின் வருகை பாலய்யாவைக் கொஞ்சம் பதம் பார்த்தது.
தயாரிப்பாளர் ராம நாயுடுவின் மகன் என்ற பின்புலத்தோடு 1986-ல் திடீரென தெலுங்கு சினிமாவுக்குள் வந்தவர் சிரஞ்சீவியையும், பாலய்யாவையும் லேசாக ஆட்டிப் பார்த்தார். முதல் படம் 'கலியுக பாண்டவுலு' ஹிட்டடிக்க 'ஶ்ரீனிவாசா கல்யாணம்', 'பிரம்ம புத்துடு', 'பிரேமா', 'துருவ நட்சத்திரம்', 'பொப்பிலி ராஜா', 'ஷண ஷணம்', 'ஸ்வர்ணகமலம்' என ஹிட்டுகளோடு நடிப்பிலும் வெளுத்து வாங்கினார். `விக்டரி' வெங்கடேஷ் என்று அடைமொழியும் வெங்கியை அரவணைக்க சிரஞ்சீவி- வெங்கடேஷ் என அடுத்த இரட்டை ஆளுமைகளாக ஊடகங்கள் எழுத ஆரம்பிக்க பாலய்யா பதறிப்போனார்.
எப்போதுமே இரவு-பகல், கருப்பு-வெள்ளை போல தமிழோ தெலுங்கோ சினிமாத்துறையில் இரண்டு உச்ச நட்சத்திரங்களை ரசிகர்கள் கொண்டாடித் தீர்ப்பார்கள். ஒருவர் நடிப்பால் ஈர்த்தால் மற்றொருவர் மாஸ் நடிகராக அங்கீகரிப்பார்கள். தமிழில் எம்.ஜி.ஆர்- சிவாஜி, ரஜினி-கமல், அஜித்-விஜய் போல தெலுங்கில் என்.டி.ஆர்- அக்கினேனி நாகேஸ்வரராவ் இருந்தார்கள். அவர்களுக்குப் பிறகு பாலய்யா சூப்பர் ஸ்டார் இடத்தை டார்கெட் பண்ணி மாஸ் படங்களாக நடித்தார். சிரஞ்சீவி மட்டும் சினிமாவுக்குள் வரவில்லையென்றால் எல்லாமே நல்லபடியாக போயிருக்கும். ஆனால், சிரஞ்சீவி கம்மியான படங்களில் நடித்தே 'சூப்பர் ஸ்டார்' என்ற இடத்தை வேறு மாதிரியாக தக்க வைத்துக் கொண்டார்.
ஒரு படத்தின் வெற்றி விழாவில் தனக்குக் கொடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை அப்போதே தவிர்த்தார் சிரஞ்சீவி, 'இது தமிழ் சினிமாவில் என் நண்பன் ரஜினி 1978-லேயே பைரவி என்ற படத்தில் நடித்ததற்காக வாங்கிவிட்டார். வேறொருவர் இந்தப் பட்டத்துக்காக என்னுடன் போட்டியில் இருக்கிறார். அவருக்கு வேண்டுமானால் இதைக் கொடுத்து விடுங்கள்!' என விளையாட்டாக பாலய்யாவை மனதில் வைத்துப் பேசப்போக... அது வினையானது.
சிறுத்தை சிரஞ்சீவி அப்படிச் சொன்னது சிங்கம் பாலய்யாவைக் காயப்படுத்தி விட்டது. ''யார் பிச்சை போட்டும் எனக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் தேவை இல்லை. என் தந்தை தான் சூப்பர் ஸ்டார். மனித வடிவில் வாழ்ந்த கடவுள். அவருக்கு நிகராக இனியொருவர் பிறக்கப்போவதுமில்லை. நான் சிங்கம் பெற்ற சிங்கம்!'' என்று பேச, ரசிகர்கள் அவரை 'நடசிம்ஹம்' என்று அதன்பிறகு அழைக்க ஆரம்பித்தனர். 'சிங்கம்' என்பதே பாலய்யாவின் முகமாய் மாறிப்போனது. 'இதென்னடா வம்பாப் போச்சு' என்று 'மெகா ஸ்டார்' என்ற பட்டத்தை 'மரண மிருதங்கம்' படத்தின் வெற்றி விழாவில் தயாரிப்பாளர் வழங்கியதை சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொண்டார் சிரஞ்சீவி.
பாலய்யாவைப் பொறுத்தவரை 'கிட்டாதாயின் வெட்டென மற' என்பதே பாலிஸி. ஒருமுறை சூப்பர் ஸ்டார் பட்டம் நழுவியதால் அதன் பிறகு எந்த `ஸ்டார்' போட்டும் தன்னை அழைப்பதை விரும்பவில்லை. 'பீப்பிள்ஸ் ஸ்டார்' பட்டத்துக்கு மட்டும் நடுவில் சலனப்பட்டாலும், அவரே ஒருமுறை, ``இந்த ஸ்டார்கள்லாம் சிலநாள்ல உதிர்ந்துடும். ஆனா, நான் சாமிப்புள்ளடா... எங்க அப்பாதான் எனக்கு சாமி!'' என 'ராம்' பட ஜீவா போல சிலிர்த்துக்கொண்டு ஸ்டேட்மெண்ட் விட்டார். தன்னை நடிப்பின் சிங்கம் என அழக்கும் 'நடசிம்ஹம்' பிடித்த அளவுக்கு 'The God Of Masses' என்ற பட்டம் அவருக்கு ரொம்பப் பிடித்தது.
தன்னை தன் தந்தையின் வாரிசாக மட்டும் அல்லாமல் மக்கள் தன்னை அவரைப்போல பெரிய அளவில் கொண்டாட வேண்டும் என்றும் நினைத்தார் பாலய்யா. அதனால் தன்னை தனி ரூட்டில் செல்லும் ஆளாய் காட்டிக் கொண்டார். அவ்வப்போது யாரேனும் சிரஞ்சீவியைப் பற்றி தன்னிடம் பேசினால், எரிந்து விழுந்தார்.
ஒருமுறை மீடியாவிடம் சிரஞ்சீவியைப் பற்றி கேள்வி கேட்ட மீடியாவிடம், ``வாடெவடோ நன்னு பாலுதன்னாடு' என்று ஒருமையில் சொல்லிவிட்டார். 'யாரோ ஒருத்தன் என்னைக் குழந்தைன்னு சொல்றான்' என்பதே அதன் அர்த்தம். `மெரிசேடிவன்னி பங்காரம் காவு!' `நானு ஒருத்தனு மட்டுமே தங்கம் காவு... மத்ததெல்லாம் காணி தகரம் காவு!' என தெலுங்கு+தமிழில் கத்த ஆரம்பித்துவிடுவார்.
இதற்கு எதிர்வினையாக பொது இடங்களில் சிரஞ்சீவி ரசிகர்கள் பாலய்யாவை பயங்கரமாகக் கேலி செய்யத் துவங்கினர். ஒருமுறை இதற்காகவே சிரஞ்சீவியை அடி பொளக்கப்போவது போல டெரராக கிளம்பிப் போய்,'எல்லாத்தையும் நிறுத்தச் சொல்லுங்க!' என்று மட்டும் சொல்லிவிட்டு திரும்பியிருக்கிறார். (பார்ச்சூனர் காரில் இவர் வந்து இறங்கிப் பேசியதெல்லாம் 'அகண்டா' படத்தை லைவ்வில் பார்த்தது போல நிச்சயம் இருந்திருக்கும்)
போதாக்குறைக்கு 'தலைநகரம்' படத்தில் நடிகர் வடிவேலு சொல்லும் 'வெறியேத்தத்தான்' என்பதுபோல பாலய்யாவுக்கு ஒரு வினோத பழக்கம் இருந்தது. (ஒண்ணு மட்டுமா இருந்துச்சு? என்ற உங்கள் மைண்ட் வாய்ஸும் கேட்கிறது) அது என்னவென்றால், நல்ல உச்சி வெயிலில் ராஜா பகுவத் போல நாற்காலி போட்டு மொட்டை வெயிலில் உட்காருவது. பங்குனி வெயில் பல்லைக் காட்டும் உச்சிப்பொழுதில் யாருமே மொட்டை வெயிலில் அமர்ந்து இருக்க மாட்டார்கள். அனால், பாலய்யா அப்படி தினமும் சில நிமிடங்கள் அமர்ந்திருப்பதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்.
சூரியக் கதிர்வீச்சில் 'சோலார் எனர்ஜி' உள்ளிட்ட நல்ல சக்திகள் இருக்கிறதாம். அது அப்படியே கபாலத்தை ஊடுருவி மூளைக்குச் சென்று ஸ்விட்ச் போட்டதுபோல தன் எனர்ஜி பேட்டரியை சார்ஜ் செய்துவிடுமாம். சுள்ளென்ற தன் கோபத்துக்கும் வேகத்துக்கும் அதுதான் காரணம் என்றும் நம்பவைக்க மெனக்கெடுவாராம். இந்த ஆளுகிட்ட மாட்டிக்கிட்டு படாதபாடு படுறதுக்கு, 'தகிலின காலே தகுலுனு' (பட்ட காலிலே படும்) என்பதை ஏற்றுக்கொண்டு, 'ஹக்காங் அண்ணய்யா' என்று தலையாட்டி சூப்பரப்பு மோடுக்குப் போனால் குஷியாகிவிடுவார். இல்லையென்றால் மிரட்டி உருட்டி சோலார் எனர்ஜி பற்றி பாடம் எடுக்க ஆரம்பித்து விடுவார்.
எவ்வளவு பிஸியான ஷூட்டிங்கிலும் இந்த சோலார் சார்ஜ் முறையை நடைமுறைப்படுத்தப் போக, 'ஏமிரா இதி?' என எல்லோரும் ஆச்சர்யமாகப் பார்த்தார்கள். ஆனால், 'சிரிச்சா போச்சு'! மனிதர் ஷூட்டிங் ஸ்பாட்டையே ரணகளப்படுத்திவிடுவார். ஆண் என்றும் பெண் என்றும் பார்க்க மாட்டார். அதே 'எந்துக்கா நகத்துனாரு?' என்று கேட்டு அடிக்கப் போய்விடுவார். இப்படி உள்ளும் புறமும் தகிக்கும் தட்பவெப்பத்தோடு, தாறுமாறு தக்காளிச் சோறாக வளைய வருவார் பாலய்யா.
``எல்லாம் சரிங்க... ஓடாத கடிகாரம்கூட ஒருநாளைக்கு ரெண்டுவாட்டி சரியா டைம் காட்டும். பாலய்யா பத்தி பாசிட்டிவ் விஷயத்தை சொல்லுங்க!''னு உங்க மைண்ட் வாய்ஸை மதிச்சு, பாலய்யா காருவைப் பற்றி 3 நல்ல விஷயங்களைப் பட்டியலிடுகிறேன்.
1. நம்ம ஊர் எம்.ஜி.ஆரை விட தாய்ப்பாசத்தில் கில்லாடி. அப்பா மீது பக்தி என்றால், அம்மா மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறார். மறைந்த தன் அம்மாவின் நினைவாக அவர் பெயரில் `பசவதாரகம் இந்தோ-அமெரிக்கன் கேன்சர் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம்' ஒன்றை ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நிறுவி, புற்றுநோயாளிகளுக்காக மிகக்குறைந்த செலவில் மருத்துவ சேவை அளித்து வருகிறார்.
2. குழந்தைகள் என்றால் இஷ்டம். 'இந்த புலிப்பாண்டி பயங்கரமானவன் தான்... ஆனால் குழந்தைகளுக்கு இல்லை' மொமண்ட்டுக்கு அடிக்கடி மாறிடுவார். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு இவரைச் சந்திக்கச் செல்லும் ரசிகர்கள் குழந்தைகளைத் தூக்கிச் சென்றால் கன்ஃபார்ம் தரிசனம் கிடைக்கும். செல்ஃபி எடுத்துக்கொள்ள அனுமதிப்பார். இந்த நடைமுறையை சமீபத்தில் தான் நிறுத்திக் கொண்டார். பாலய்யாவின் இந்த அன்பை அட்வான்டேஜாக எடுத்துக்கொண்டு ஆளாளுக்கு குழந்தைகளோடு படையெடுக்கத் துவங்க, ''பாப்பா கண்ணை மூடிக்கங்க... டாடிகிட்ட ஒரு ரகசியம் சொல்லணும்...சரியா?'' என்று சொல்லி சம்பந்தப்பட்ட நபரை முதுகில் அறைவார்.
3. `சினிமாவில் தன்னுடைய அரசியலை கலக்க வேண்டாம்' என கதை சொல்லும் இயக்குநர்களுக்கு தெளிவாக சொல்லிவிடுவார். 'மாஸா கெத்தா டயலாக் இருக்க வேண்டும்!' என்பது மட்டுமே அவர் போடும் கன்டிஷன். படங்களிலோ தன்னுடைய படங்களின் புரொமோஷன் விழாக்களிலோ அரசியல் பேசக்கூடாது என்பதை பாலிஸியாக வைத்திருக்கிறார். சந்திர பாபு நாயுடுவே ஒருமுறை படங்களில் தெலுங்கு தேசம் கட்சி பற்றி பேசச் சொன்னதற்கு, ''தப்பா நினைச்சுக்காதீங்க...எண்ணையும் தண்ணியும் மாதிரி இரண்டையும் தனித்தனியாத்தான் பார்க்கிறேன். அதோட இதையும், இதோட அதையும் மிங்கிள் பண்ணக் கூடாது.'' என்று சொல்லி ஷாக் உண்டு பண்ணியிருக்கிறார்.
- அட ஆச்சர்யமாக இருக்கிறதா..? அவரிடம் எந்த அளவுக்கு இதுபோல 'குட்' பாலிஸிகள் இருக்கிறதோ அதைவிட நான்கு மடங்கு 'பேட்' பாலிஸிகளும் இருக்கிறது. அவற்றை அடுத்தடுத்த எபிசோடுகளில் பந்தி வைப்போம்.
``என்னங்க இப்படிச் சொல்றீங்க... `பாலய்யா 50' ன்னு தலைப்பைப் போட்டு பாலய்யா பண்ணின அட்ராசிட்டிக்களை பட்டியல் போடுறதுக்காகவா இந்தத் தொடரை எழுதுறீங்க?'' என்று கேட்குறவங்களுக்கு ஒண்ணே ஒண்ணு சொல்லிக்கொள்கிறேன்...
`ராமாயணமந்தா வினி சீதகு ராமுடு ஏமவுதாடனி அடிகிண்டண்டா!' (விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு, விடிஞ்சபிறகு சீதைக்கு ராமன் சித்தப்பன்னானாம்!)
ஆமாம் மக்களே... அவர் பண்ணின சம்பவங்களை எல்லாம் தொகுத்தால் அவர் படங்களைவிட செம அதிரிபுதிரியா இருக்கும். இது அட்ராசிட்டி தொடர் தான். அட்ராசிட்டி என்றால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை வினிதா சொன்ன ஒரு குற்றச்சாட்டு உங்கள் ஞாபகத்துக்கு வரும்... அதுபற்றி பாலய்யாவிடம் ஒருவர் கேட்டிருக்கிறார். அதற்கு அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா..?
(தொடரும்...)