நீா்நிலைகளில் குப்பைகளைக் கொட்டுவதை தடுக்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்
பாலய்யா வஸ்தாவய்யா- 8: `இரவு பார்ட்டியில் நடந்த ஷாக்' - சட்டமன்றத்தில் ரணகள அதகளம்
சென்ற எபிசோடில் பாலய்யாவால் மிரண்டு போன இயக்குநர் பிரியதர்ஷன் பற்றி சொல்வதாகச் சொல்லியிருந்தேன். 90களின் இறுதியில் நடந்த சம்பவம் அது.
தன் இயக்கத்தில் ஹிட்டடித்த பாலிவுட் படமொன்றின் சில்வர் ஜூப்லி வெற்றி விழாவுக்கான பார்ட்டியை மும்பை வீட்டில் ஏற்பாடு செய்திருந்தார் பிரியதர்ஷன். அந்த நேரத்தில் பாலய்யா வேறு விஷயமாக மும்பைக்கு வந்திருந்ததைக் கேள்விப்பட்டு நட்பு நிமித்தமாக பாலய்யாவை அழைத்திருந்தார் பிரியதர்ஷன்.
பாலய்யாவுக்கு மூக்கு வியர்த்து விட்டது. ஒரு குழந்தையின் குதூகலத்துடன், ``பார்ட்டினா... அது தருவீங்க தானே..?'' என வெளிப்படையாகக் கேட்டிருக்கிறார். எல்லாம் மது விருந்து தான். உடனே பாலய்யாவுக்குப் பிடித்த பிராண்ட் என்ன என்று கேட்டிருக்கிறார் பிரியதர்ஷன்.
இந்த இடத்தில் ஒரு விஷயத்தைச் சொல்லியே ஆக வேண்டும். இப்போது வரை ஆந்திரா-தெலங்கானா யூத்துகளின் இன்ஸ்டாகிராம், யூ-டியூப் ரீல்ஸ் மற்றும் ஷார்ட்ஸ்களில் 'பாலய்யா சரக்கு' என்று `குறிப்பிட்ட' பிராந்தியை அழைப்பதை ட்ரெண்டாகவே நீங்கள் பார்க்க முடியும். எப்போதாவது `மற்றொரு பிராண்ட்' என்ற பிராந்தியை எடுத்துக் கொள்வார். தான் கேட்பதைத்தாண்டி, 'இது ரொம்ப காஸ்ட்லி சரக்கு சார்!' என்று பெருமை பொங்க யாரேனும் வேறொன்றை நீட்டினால் வறுத்தெடுத்து விடுவார்.``உர்ரே... என்னை என்ன வக்கில்லாதவன்னு நினைச்சியா...? நான் உன்னை மாதிரி கேடுகெட்டவன் இல்லைடா... என்னைப் பார்த்தா குடிகாரன் மாதிரியா இருக்கு தொங்கன குடுக்கா!'' என்று அடிக்கப் பாய்ந்து விடுவார். பாலய்யா மீடியாக்களிடம் பேசும்போது யாரேனும் குடிப்பழக்கம் பற்றிக் கேட்டால், ஒளிவுமறைவின்றி பேசுவார். அந்தக் கேள்வியைத் தவிர்க்க மாட்டார். ஆனால், அதை எள்ளல் தொனியில் பேசினால் தான் கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடும்.
அதேபோல பாலய்யா தன் படங்களில் குடிப்பது போல் காட்சிகள் இருந்தால், இந்த பிராண்ட் சரக்குகளை மட்டும்தான் குடிப்பதாய் காட்சிகள் வைப்பார். உதாரணமாக, 'ஜெய் சிம்ஹா' படத்தைப் பார்த்தால் தெரியும். படத்தில் அவர் குடிப்பது ஆப்பிள் ஜூஸ் தான் என்றாலும் காலி பாட்டில்கள் அத்தனையும் `குறிப்பிட்ட' பிராண்ட் தான். உபயோகிக்காத ஒன்றை திரையில் காட்டிவிடக்கூடாது என்ற 'எத்திக்ஸ்' உள்ளவர் பாலய்யா. சரி... பிரியதர்ஷன் பார்ட்டிக்கு வருவோம். பாலய்யா பார்ட்டிக்கு வந்ததைப் பார்த்து, ஆச்சர்யத்தில் உச்சத்துக்குப் போன பிரியதர்ஷன் உடனடியாக அவரை உபசரிப்பதற்காகவே நந்துலால் கிருஷ்ணமூர்த்தி என்ற மும்பை வாழ் தமிழ் அசோஸியேட் இயக்குநரை நியமித்திருக்கிறார். அவரின் ஒரே வேலை மறுநாள் காலை வரை பாலகிருஷ்ணாவை 'சாப்பிட வைத்து', தூங்க வைத்து', 'காலையில் பத்திரமாக ஏர்ப்போர்ட் அனுப்பி வைக்கவேண்டும்' என்பதே! இனி யூ-டியூப் பேட்டியில் பாலய்யாவைப் பற்றி நந்துலால் கிருஷ்ணமூர்த்தி சொன்னதை அவர் வாய்மொழியிலேயே கேளுங்கள்... ``அது ஜூஹு கடற்கரையை ஒட்டியிருக்கும் அழகான வீடு. பத்துக்கும் மேற்பட்ட அறைகளோடு பண்ணை வீடு பாணியில் பிரியதர்ஷன் பார்த்துப்பார்த்துக் கட்டிய வீடு. அந்த வீட்டில் மாலையிலிருந்து பிரபலங்கள் வர ஆரம்பித்து 7 மணிக்கு மேல் மது விருந்தினைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர்.
பாலய்யா 6 மணிக்கே என்னைப் பார்த்து 3 முழு `மற்றொரு பிராண்ட்' பிராந்தி பாட்டில்களைக் கேட்டார். நான் அவருக்காக பிரத்யேகமாக வரவழைத்து, டைனிங் ஹாலுக்கு எடுத்துச் சென்று, `சார்... உங்க ஐட்டம்!' என்று காட்டினேன். பள்ளி மாணவனின் உற்சாகத்தோடு தாவிக்குதித்து ஓடி வந்து என்னிடமிருந்து மூன்று பாட்டில்களையும் வாங்கிக் கொண்டார். அங்கிருந்த எல்லோரும் அவர் அப்படிச் செய்ததை ஆச்சர்யமாகப் பார்த்தார்கள். ஆனால், எனக்கு அத்தனை ஆச்சர்யம் இல்லை. ஏனென்றால் பாலய்யா வருவதற்கு முன்பே என்னை தனியாக அழைத்து, பிரியதர்ஷன் சார் பாலய்யா பற்றி படம் வரைந்து விளக்காத குறையாக பாடம் எடுத்துவிட்டார். அதில் பாலய்யாவைப் பற்றி நிறையவே அபூர்வத் தகவல்களைச் சொல்லியிருந்தார். நான் அவர் சொன்ன பல விஷயங்களுக்கு சிரித்து வைத்தாலும், ஒரேயொரு விஷயத்துக்காக பயப்படவும் செய்தேன். அது `பொசுக்கென கோபப்படுபவர் பாலய்யா' என்பதே அது! `பாலய்யாவை மனம் கோணாமல் கவனித்து அனுப்புவதே உன் பிரதான வேலை!' என்று பிரியதர்ஷன் என்னிடம் திரும்பத் திரும்ப சொல்லியபடி இருந்ததால் இனம் புரியாத பதட்டமும் கூடியிருந்தது.
அதனால் என் ஃபோகஸ் முழுவதும் பாலய்யா மீதுதான் இருந்தது. 12 மணி வரை முழு பாட்டிலைக் காலி பண்ணியவர் அதன் பிறகு செய்ததுதான் `குபீர்' ரகம்.`சூப்பர் சார்... வாங்க சாப்பிட்டுப் படுக்கலாம். ஆளைத்தூக்கிடப் போகுது. உங்களுக்கு மார்னிங் ஃப்ளைட் இருக்கு!'' என்றதும், என்னைப் பார்த்து கோபமானார் பாலய்யா. இன்னொரு பாட்டிலை வாங்கி மடக் மடக்கென `ஏக் தம்'மில் 750 மி.லி-யையும் குடித்துவிட்டு எங்கள் எல்லோரையும் அலட்சியமாகப் பார்த்தார். 'கறந்த பால் கவுண்டருக்கு ஆகாதுனு சொன்ன முதல் ஆள் நீதான்!' என்ற கவுண்டமணியைப்போல அப்பார்வை இருந்தது. அவ்வளவு தான்... 'சொய்ங்...தடால்...!' என நெடுஞ்சாண்கிடையாக விழுந்து விட்டார். ஒரு கணம் அதைப் பார்த்து இதயம் நின்று துடித்தது. அதன்பிறகு அவரை அவர் அறைக்கு நான்குபேர் சேர்ந்து தூக்கிப் போய் படுக்க வைத்துவிட்டு என் அறைக்கு வந்தேன். மறுநாள் காலை பாலய்யாவுக்கு 9 மணி சென்னை ஃப்ளைட். 10 மணிக்கு எனக்கு திருவனந்தபுரம் ஃப்ளைட். அதனால் அவரால் எழ முடியுமா தெரியவில்லை. நான் கிளம்பியே ஆகவேண்டும் என்ற மனநிலையில் அதிகாலை வரை எனக்குத் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தபடி 5 மணி வாக்கில் அயர்ந்து தூங்கி விட்டேன். என்னை எழுப்பியது பிரியதர்ஷன் சாரின் போன் கால். அவர் மும்பையின் இன்னொரு இடத்தில் இருந்தார். இரவெல்லாம் இரண்டு பாட்டில்களைக் காலி செய்து விழுந்த பாலய்யாவின் நினைப்பு இருந்ததால் போன் காலை பதட்டத்தோடு தான் எடுத்தேன்.
``டேய்...பாலய்யாவுக்கு என்னாச்சுனு பாரு... எனக்கும் தூக்கமே இல்லைடா... நைட் மூர்ச்சையாகி விழுந்தாரு என்னாச்சோ ஏதாச்சோனு பதட்டமா இருக்கு... ஓடிப்போய் மூச்சு இருக்கானு பாரு..!' என்று என்னை விரட்டினார். அலறியடித்து பாலய்யாவைப் படுக்க வைத்த அறைக்கு ஓடினேன். அங்கு நான் கண்ட காட்சி இது கனவா நனவா என கேட்க வைத்தது.
ஆம். பாலய்யா டிராக் ஷூட், ஷூ, டி-சர்ட் எல்லாம் போட்டு ஜாக்கிங் போய்விட்டு திரும்பி இருந்தார். என்னைப் பார்த்ததும் உற்சாகமாய்,``ஹாய் நந்துலால்... நைட்டு ஏன் மேன் எனக்கு டின்னர் தராம தூங்க வெச்சே..? செமையா பசிச்சுச்சு. மூணரை மணிக்கு எந்திரிச்சு டிபன் எதுவும் கிடைக்குமான்னு வீடுபூரா தேடிப் பார்த்தேன். எதுவும் இல்லை. நல்ல வேளை... கிச்சன் ஃபிரிட்ஜ்ல ஜூஸும் பீட்சாவும் இருந்துச்சு. எடுத்து சாப்பிட்டேன். நான் ஏற்கனவே 4 மணிக்கு வாக்கிங் போயிட்டு வநந்துட்டேன். வா இன்னொருவாட்டி போயிட்டு வரலாம்!'' என்றார். நான் உண்மையில் மிரண்டு விட்டேன்.
மனிதர் அத்தனை தெளிவாகவும் கொஞ்சம்கூட சோர்வாகவும் இல்லை என்பதே என் ஆச்சர்யத்துக்கான காரணம். பொதுவாக பாலய்யாவை ரயிலையே ஒற்றை விரலால் திருப்பி அனுப்பியவர் என்று கிண்டல் செய்வார்கள். ஆனால், நான் என் அனுபவத்தில் சொல்கிறேன். அவர் ஒன்பது கோள்களைக்கூட...அவ்வளவு ஏன் பால்வெளியைக் கூட ஒற்றை விரலால் திருப்பி அனுப்பி விடுவார். அந்த அளவுக்கு ஸ்ட்ராங்கான மனிதர்!'' என்று அந்தப் பேட்டியில் சொல்லி கலகலப்பாக்கியிருந்தார் நந்துலால் கிருஷ்ண மூர்த்தி. ``நான் குடிச்சேன் தான்... ஆனா, இப்போ இல்லை!'' என்று சமீபத்தில் அவரே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். மகள்களின் அன்புக் கட்டளையைக் கேட்டு அந்தப் பழக்கத்திலிருந்து மீண்டிருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள். ஆனால், கோபத்தைத்தான் யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.
அதுவும் ஜெகன் மோகன் ரெட்டி பற்றிக் கேட்டால் சால்னாவுக்கு முன் ரொட்டியைப் பிய்ப்பதுபோல் பிய்த்து எறிந்து விடுகிறார்.``இதோ ஆந்திரா சி.எம் இருக்கானே... அவன் ஒரு பபூன், லூஸுனு கூட சொல்ல முடியாது. அவன் ஒரு பெரிய சைக்கோ... அவனை மாதிரி எங்களையும் நினைச்சுட்டு இருக்கான் ப்ளடி ஃபெல்லோ!'' - இப்படி இந்தியா டுடேவுக்கு 22-9-2023 அன்று கொடுத்த வீடியோ பேட்டியில் பேசி ஆந்திர ஸ்டேட்டுக்கே ஷாக் கொடுத்தார். எவ்வளவு கேவலமாக பேச முடியுமோ, அவ்வளவு கோவலமாக முதலமைச்சர் என்றும் பாராமல் பேசியிருக்கிறார்.அதேபோல சட்டப் பேரவையில் அவர் பண்ணியவை எல்லாம் 'ஆவேசம் ரங்கா' ரகம்! எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களுக்கு ஆபாச சமிக்ஞை காட்டியது, சினிமா ஸ்டைலில் சவுண்டு விட்டு தொடையைத் தட்டி மல்லுக்குக் கூப்பிட்டது, விசில் வைத்து ஊதி சவுண்ட் எழுப்பியது என குண்டூர் காரத்தை மிஞ்சி விட்டார்.
சட்டனெ வரும் கோபம் பட்டென மறையும் வேகம் என்பதை நிரூபிக்கும் விதமாக இத்தனை அழிச்சாட்டியமும் பண்ணிவிட்டு வெளியே வந்து காரில் ஏறும் போது ஊடகங்கள் மைக்கை நீட்டினால்,``பின்ன என்னங்க... இந்த எம்.எல்.ஏக்கள் அம்பத்தி ராம் பாபுவும், கோடாலி நானியும் என் வேலையை அசிங்கப்படுத்தினா எப்படிங்க பொறுத்துக்க முடியும்? நான் பேச ஆரம்பிச்சாலே, அவனுங்க ரெண்டு பேரும் இது ஒண்ணும் நீங்க பஞ்ச் பேசுற சினிமா கிடையாது, சினிமால வேணும்னா உதார் விடலாம்... இங்கே இல்லைன்னு சொல்லி வெறுப்பேத்திட்டு இருக்கானுங்க... அதான் இன்னிக்கு சினிமா ஸ்டைல்ல ஒரு காட்டு காட்டினேன். பயலுக பயந்துட்டானுங்க!'' என்று புஹுஹா சிரிப்பை உதிர்த்தார் பாலய்யா.
போன ஆட்சியில் மெஜாரிட்டியாய் இருந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினராலேயே பாலய்யாவை கன்ட்ரோல் செய்ய முடியவில்லை. இம்முறை மெஜாரிட்டியாய் சட்டப்பேரவையில் தெலுங்கு தேசம் கட்சியினரே இருக்கிறார்கள். பாலய்யா என்ன வேண்டுமானாலும் செய்வார் என்று சம்பவத்தை அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், பாலய்யா இம்முறை சட்டப்பேரவையில் சாத்வீக மோடுக்குப் போய்விட்டார். `மன பாலய்யா காரு நெக்ஸ்ட்டு சி.எம்மு!' என இப்போதே ஆதரவாளர்கள் பாலய்யாவை முதல்வர் நாற்காலியில் உட்கார வைக்க அச்சாரம் போடுகிறார்கள்.
பாலய்யாவும் சந்திரபாபு நாயுடுவுக்கு தொந்தரவு கொடுக்காமல், `மாமா காரு மாமா காரு' என உருகி வழிகிறார். களவாணி படத்தின் க்ளைமாக்ஸில் விமல் ஒரு பெர்ஃபார்மென்ஸ் பண்ணுவாரே ஞாபகம் இருக்கிறதா..? ''டேய் யார் மேலடா கையை வெச்சீங்க.... என் மச்சான் மேலயே கைய வெப்பீங்களா... இப்ப வையுங்கடா பார்ப்போம்!'' மோடுக்குப் போய், ''என்னைக் கைது செஞ்சிருந்தாக்கூட நான் பொறுமையா இருந்துருப்பேன். ஆனால், என் மாமாவைக் கைது செஞ்சதைத்தான் என்னால தாங்கிக்க முடியலை. என் மாப்பிள்ளை நர லோகேஷைக் கைது செஞ்சு என்னை அசிங்கப்படுத்தலாம்னு பார்க்குறீங்களா? இனி வெச்சுப் பாருங்க... ஆந்திரால ஒரு பெரிய பிரளயமே உருவாகும். நான்லாம் தூங்கும் எரிமலையா இருக்குறவன். எப்போ வெடிப்பேன்னு எனக்கே தெரியாது. ஜாக்கிரதை!'' என மிரட்டல் விடுகிறார்.``அறிவு இருக்கா... மனுஷன் தானே நீ?'' என்றெல்லாம் சந்திரபாபு நாயுடுவை சட்டப்பேரவையில் வைத்தே தாளித்து எடுத்த ஜெகன் மோகன் ரெட்டி, தன்னை கேவலமாகத் திட்டும் பாலய்யாவை மட்டும் கடிந்து கொண்டதே இல்லை..? காரணம் என்ன தெரியுமா..?
( விசில் பறக்கும்...)