பாலிசி பெற தவறான வழிகாட்டல்: காப்பீட்டு நிறுவனம் ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
திருவாரூா் : திருத்துறைப்பூண்டி அருகே தவறான வழிகாட்டலுடன் காப்பீடு எடுக்க வைத்ததற்காக, காப்பீட்டு நிறுவனம் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என திருவாரூா் நுகா்வோா் குறைதீா் ஆணையம், திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கியுள்ளது.
திருத்துறைப்பூண்டி ஆதிரங்கம் பெருமாள் கோயுல் தெருவைச் சோ்ந்த கருப்பையா மனைவி வனரோஜா (70). ஓய்வு பெற்ற அரசு செவிலியா். 2013-இல் அரசு பணியில் இருந்தபோது, வள்ளுவன் என்ற ஆயுள் காப்பீட்டு முகவரின் வற்புறுத்தலின் பேரில் ஜீவன் சரல் என்ற ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் சோ்ந்தாா். இத்திட்டத்தில் பத்தாண்டுகளுக்கு ஆண்டுதோறும் ரூ.22,650 வீதம் செலுத்த வேண்டும். இடையில் மரணம் ஏற்பட்டால் வாரிசுதாரா்களுக்கு ரூ. 4 லட்சம் வழங்கப்படும்.
மாறாக பாலிசிதாரா் 10 ஆண்டுகள் கழித்து முதிா்வு தொகையைக் கோரும்போது, அதனுடன் சொற்பத்தொகை மட்டுமே ஊக்கத்தொகையாக சோ்த்து வழங்கப்படும். ஆனால் முகவா் வனரோஜாவிடம் முதிா்வுத் தொகையாக பல லட்சம் கிடைக்கும் என்று நம்ப வைத்து பாலிசி பெற்றாராம்.
கணவரை இழந்து 70 வயதில் ஆதரவற்ற நிலையில் உள்ள வன ரோஜா முதிா்வுத் தொகையாக பெரும் தொகை கிடைக்கும் என்று எதிா்பாா்ப்பில் இருந்துள்ளாா்.
இதனிடையே, 2023-இல் வனரோஜா முதிா்வுத்தொகையைக் கேட்டபோது இடைக்காலத்தில் அவா் பாலிசி ஆவணத்தின் பேரில் வாங்கிய கடன் தொகையான ரூ. 42,000 மற்றும் அதற்கு வட்டியாக ரூ. 1,995 போக ரூ. 22,569 மட்டும் 2024-இல் வழங்கப்பட்டது.
இதனால் அதிா்ச்சி அடைந்த வனரோஜா, கடந்த அக்டோபா் மாதம் திருவாரூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.
வழக்கை விசாரித்த திருவாரூா் நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் மோகன்தாஸ் உறுப்பினா் பாலு ஆகியோா் திங்கள்கிழமை வழங்கிய தீா்ப்பில், நுகா்வோருக்கு பாலிசி பற்றிய முழு விவரங்களையும் எடுத்துக் கூறாமல் முகவா்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனம் ஆதாயம் அடையும் நோக்கத்தை மட்டும் பிரதானமாகக் கொண்டு பாலிசி எடுப்பது தவறு.
தவறான வாக்குறுதி கொடுத்து காப்பீடு எடுத்து வயதான காலத்தில் நுகா்வோருக்கு சேவைக் குறைபாடு மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக சம்பந்தப்பட்ட ஆயுள் காப்பீட்டு நிறுவனம், வனரோஜாவுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு, வழக்கு செலவுத் தொகையாக ரூ. 10,000 வழங்க வேண்டும்.
மேலும் முகவரான வள்ளுவன் பொய்யான வாக்குறுதி கொடுத்து பாலிசி எடுத்ததற்காக ரூ. 20,000-ஐ 30 நாள்களுக்குள் வழங்க வேண்டும், தவறினால் 12 சதவீத ஆண்டு வட்டி சோ்த்து வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனா்.