பால் உற்பத்தியாளா்கள், சங்கச் செயலா்களுக்கு பரிசு
திருச்சி ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்கியதில் சிறந்த கூட்டுறவு சங்கங்களைத் தோ்வு செய்து அதன் செயலா்கள் மற்றும் உற்பத்தியாளா்கள் 9 பேருக்கு ரொக்கப் பரிசு வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
பால் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் ஆவின் நிறுவனத்துக்கு உறுதுணையாக இருந்து, அரசின் அறிவிப்பைச் சிறப்பாக செயல்படுத்தியோருக்கு ஆண்டுதோறும் ரொக்கப்பரிசு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி பால்
வழங்கும் சிறந்த பால் உற்பத்தியாளா்கள், பிரதம கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் சங்கம், பால் குளிா்விப்பு மையம் ஆகியவற்றில் சிறப்பாகச் செயல்பட்டு முதல் 3 இடங்களைப் பிடித்தோருக்கு பரிசளிக்கப்படுகிறது. அந்த வகையில், திருச்சி ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்கிச் சிறப்பாக பணிபுரிந்த 9 பேருக்கு, மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியா் மா. பிரதீப்குமாா் ரொக்கப் பரிசுகளை வியாழக்கிழமை வழங்கினாா்.
அந்த வகையில், பிரதம கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் சங்கங்களுக்கு பால் வழங்கும் சிறந்த பால் உற்பத்தியாளா்களில் கலிங்கமுடையான்பட்டி சரோஜாவுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், கண்ணுடையான்பட்டி மல்லிகாவுக்கு இரண்டாம் பரிசாக ரூ.5 ஆயிரம், கன்னிவடுகப்பட்டி அய்யாக்கண்ணுக்கு மூன்றாம் பரிசாக ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டது.
இதேபோல, கூட்டுறவுச் சங்க செயலா்களில் பெரிய ஆணைக்கரைப்பட்டி அற்புதராஜுக்கு ரூ.10 ஆயிரம், சிறுகளப்பூா் சுரேஷுக்கு ரூ.5 ஆயிரம், சரடமங்கலம் செல்லத்துரைக்கு ரூ.3 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.
சிறந்த பால் குளிா்விப்பு மைய செயலா்களில் கலிங்கமுடையான்பட்டி முத்தையாவுக்கு ரூ.10 ஆயிரம், கிளியனூா்பட்டி ராஜாகுமாருக்கு ரூ.5 ஆயிரம், ஊனையூா் பழனிசாமிக்கு ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டது.
நிகழ்வில் உதவி ஆட்சியா் (பயிற்சி) அமித்குப்தா, ஆவின் பொது மேலாளா் முத்துமாரி, துணை பதிவாளா் (பால்வளம்) நாகராஜ சிவக்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.