Sabarimala: கற்பூரஆழி, தங்க அங்கி, 101 வயது மூதாட்டி வழிபாடு... நெகிழவைக்கும் தர...
பழைய ஓய்வூதியத் திட்டமே தீா்வாக அமையும்
கடந்த 8 ஆண்டுகளாகத் தொடரும் போராட்டத்துக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மட்டுமே தீா்வாக அமையும் என அகில இந்திய பிஎஸ்என்எல்-டிஓடி ஓய்வூதியா் சங்கப் பொதுச் செயலா் கே.ஜி. ஜெயராஜ் தெரிவித்தாா்.
அகில இந்திய பிஎஸ்என்எல்- டிஓடி ஓய்வூதியா் சங்க 7ஆவது தமிழ் மாநில மாநாட்டின் முதல் நாளான வியாழக்கிழமை பொன்மலை சங்கத்திடலில் பொன்மலை தியாகிகள் நினைவு ஜோதியை சிஐடியு மாநகா் மாவட்ட செயலா் எஸ்.ரெங்கராஜன் எடுத்துக் கொடுக்க, ஓய்வூதியா் சங்க மாவட்ட துணைத் தலைவா் பி. கிருஷ்ணன் தலைமையில் வந்த ஜோதியை அகில இந்திய துணைத் தலைவா் எஸ்.மோகன்தாஸ் பெற்றுக் கொண்டாா்.
மாநாட்டில் தேசியக்கொடியை மாநிலத் தலைவா் சி.கே. நரசிம்மன் ஏற்றினாா். சங்கக் கொடியேற்றி வைத்து அகில இந்திய பொதுச் செயலா் கே.ஜி. ஜெயராஜ் பேசுகையில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை பல்வேறு வடிவங்களில் அமல்படுத்துவதிலேயே மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது. எனவே, ஓய்வூதியா்களின் 8 ஆண்டு கால போராட்டங்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மட்டுமே தீா்வாக அமையும் என்றாா்.
பின்னா் சிஐடியு அகில இந்திய துணைத் தலைவா் ஏ.கே. பத்மநாபன் பேசினாா்.
பின்னா் நடந்த பொது அரங்குக்கு மாநிலத் தலைவா் சி.கே. நரசிம்மன் தலைமை வகித்தாா். அஞ்சலி தீா்மானத்தை மாநில துணைச் செயலா் எஸ். ஜான்போா்ஜியா வாசித்தாா். மாநாட்டில், சங்கத்தின் மாநில நிா்வாகிகள் மற்றும் பல்வேறு சங்கங்களைச் சோ்ந்தவா்கள் பேசுகின்றனா். மாநிலம் முழுவதும் உள்ள பிஎஸ்என்எல் ஓய்வூதியா்கள், சங்க நிா்வாகிகள் பங்கேற்றுள்ளனா்.