மகாராஷ்டிரா: விலை சரிவால் கோபம்; அமைச்சரின் கழுத்தில் வெங்காய மாலை அணிவித்து விவசாயிகள் எதிர்ப்பு!
நாட்டில் வெங்காய விளைச்சலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் இருக்கிறது. ஆனால் கடந்த ஒரு மாதமாக வெங்காயத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாசிக் மாவட்டத்தில்தான் அதிக அளவில் வெங்காயம் விளைகிறது. வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள 20 சதவீத வரியை ரத்து செய்யவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே வெங்காய மார்க்கெட்டில் ஏலத்தில் நிறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். மகாராஷ்டிரா மீன்வளத்துறை அமைச்சர் நிலேஷ் ரானே நாசிக் அருகில் உள்ள சிராய் என்ற கிராமத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றார். அவர் மேடையில் பேச ஆரம்பித்தபோது ஒருவர் அவரை நெருங்கி வந்தார். அந்த நபர் திடீரென தன்னிடமிருந்த வெங்காய மாலையை எடுத்து அமைச்சர் கழுத்தில் அணிவித்தார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பலத்த பாதுகாப்பையும் மீறி அந்த நபர் அமைச்சருக்கு வெங்காய மாலை அணிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வெங்காய மாலை அணிவித்ததோடு மைக்கில் தனது குறைகள் குறித்து பேச முயன்றார். ஆனால் அதற்குள் அவரை போலீஸார் அங்கிருந்து பிடித்துச் சென்றனர். அவரை பேச விடும்படி நிலேஷ் ரானே கேட்டுக்கொண்டார். ஆனால் அவரை போலீஸார் பிடித்துச் சென்றனர்.
அவரிடம் போலீஸார் விசாரித்தபோது வெங்காய மாலை அணிவித்த நபர் வெங்காய விவசாயி என்றும், வெங்காய விலை தொடர்ந்து சரிந்து வந்ததால் கோபத்தில் வெங்காய மாலை அணிவித்தது தெரியவந்தது. காரீப் பருவ வெங்காய வரத்து மார்க்கெட்டிற்கு அதிக அளவில் வர ஆரம்பித்து இருக்கிறது. எனவேதான் விலையில் சரிவு ஏற்பட்டு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர். வெங்காய ஏற்றுமதிக்கு ஆரம்பத்தில் 40 சதவீதம் வரி இருந்தது. ஆனால் மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலையொட்டி கடந்த செப்டம்பர் மாதம் 40 சதவீத வரியை 20 சதவீதமாக மத்திய அரசு குறைத்தது. ஆனால் தற்போது 20 சதவீதத்தையும் நீக்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.