விராட் கோலியின் முதல் சதம்!கவனத்தை ஈர்க்கும் ஆர்சிபி அணியின் பதிவு
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் உலகின் முன்னணி பேட்ஸ்மென்களில் ஒருவரான விராட் கோலி முதல்முதலாக சதம் அடித்த நாளை நினைவுகூரும் விதத்தில், கோலியை வாழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு(ஆர்சிபி) அணி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவொன்றைப் பகிர்ந்துள்ளது.
ஆர்சிபி அணி வெளியிட்டுள்ள புகைப்படப் பதிவில், ஷோஃபாவில் அமர்ந்துகொண்டு கையில் விடியோ கேம் கருவியைப் பிடித்தபடி இருக்கும் கோலி, தனக்கு எதிரே தெரியும் தொலைக்காட்சி திரையில், தான் சதம் அடித்துவிட்டு அந்த மகிழ்ச்சியில் கையிலிருக்கும் பேட் மற்றும் தலையிலிருந்த ஹெல்மெட்டை உயர்த்திப் பிடித்தபடி பெருமிதத்துடன் நிற்கும் தருணத்தை காண்பதாக ஆர்சிபி அணியின் பதிவு அமைந்துள்ளது. இந்த பதிவில் ‘கோலியின் தரத்துக்கு நிகராக வேறு எவருமில்லை’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளதும் கவனத்தை ஈர்க்கிறது.
ஆர்சிபி அணியின் இந்த பதிவு விராட் கோலியின் ரசிகர்கள் மட்டுமல்லாது கிரிக்கெட் ரசிகர்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கடந்த 2009-ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார் விராட் கோலி. இந்த போட்டியில் கோலி 109 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மறுபுறம் கௌதம் கம்பீர் 150 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை. இவர்கள் இருவரும் சேர்ந்து இந்திய அணி 3-ஆவது விக்கெட்டுக்கு 224 ரன்கள் குவிக்க உதவினர். இதனால் இந்திய அணி, இலங்கை அணி நிர்ணயித்திருந்த 316 ரன்கள் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. ஆட்ட முடிவில், கௌதம் கம்பீருக்கு ஆட்டநாயகன் விருது வழஙப்பட்ட நிலையில், அதனை அப்படியே விராட் கோலியிடம் அளித்து நெகிழ்ச்சிப்படுத்தினார் கம்பீர் என்பது குறிப்பிடத்தக்கது.