ஹிமாசல் பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு! 1000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் நடுவழியில் நிறுத்தம்
ஹிமாசல் பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக திங்கள்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் சாலையில் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். பனிப்பொழிவு அதிகரிப்பால் ஷிம்லா நகரம் வெண்பனிப் போர்வை போர்த்தியபடி காட்சியளிக்கிறது.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் ஹிமாசல் பிரதேசத்துக்கு வருகை தருவதால் போக்குவரத்து நெரிசல் மிகுதியானாலும், மறுபுறம் கடும் பனிப்பொழிவால் சாலைகளில் வாகனங்களை இயக்க முடியாத சூழல் அங்கு நிலவுவதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. பனிப்பொழிவால் மணாலியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக திங்கள்கிழமை இரவு சோலங் முதல் ரோஹ்டங்கில் உள்ள அடல் சுரங்கப்பாதை வரை, சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவால் முன்னோக்கிச் செல்ல முடியாததால் வாகன ஓட்டிகள் மணிக்கணக்கில் பரிதவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்று வாகனப் போக்குவரத்தை சீரமைத்த காவல்துறையினர் சுற்றுலா பயணிகள் சுமார் 700 பேரை பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.