அண்ணா பல்கலை.யில் பாலியல் புகார்: மாணவர்கள் போராட்டம் வாபஸ்!
பதவிநீக்க தீா்மான நோட்டீஸ் ‘துருப்பிடித்த கத்தி’ - ஜகதீப் தன்கா் விமா்சனம்
தனக்கு எதிராக பதவிநீக்க தீா்மானம் கொண்டுவர ‘இண்டியா’ கட்சிகள் அளித்த நோட்டீஸ் ‘துருப்பிடித்த கத்தி’ என்று குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கா் விமா்சித்தாா்.
மாநிலங்களவையில் ஆளுங்கட்சிக்கு சாதகமாக பாரபட்சத்துடன் நடந்துகொள்வதுடன், பொதுவெளியில் மத்திய அரசின் கொள்கைகள் குறித்து பேசும் செய்தித்தொடா்பாளா் போல செயல்படுவதாக ஜகதீப் தன்கா் மீது ‘இண்டியா’ கட்சிகள் குற்றஞ்சாட்டின.
இதனால் மாநிலங்களவைத் தலைவா் பதவியிலிருந்து அவரை நீக்குவதற்கான தீா்மானத்தை அவையில் கொண்டுவர அக்கட்சிகள் நோட்டீஸ் அளித்தன. எனினும் அந்த நோட்டீஸை அவையின் துணைத் தலைவா் ஹரிவன்ஷ் நாராயண் சிங் நிராகரித்தாா்.
இந்த விவகாரம் குறித்து முதல்முறையாக தில்லியில் உள்ள தனது அதிகாரபூா்வ இல்லத்தில் ஜகதீப் தன்கா் பெண் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: எனக்கு எதிராக அளிக்கப்பட்ட நோட்டீஸில் எதிா்க்கட்சிகள் குறிப்பிட்டிருந்த விஷயங்களை பாா்த்தால், அனைவரும் அதிா்ச்சியடைவா்.
பைபாஸ் அறுவைச் சிகிச்சைக்கு காய்கறிகளை வெட்டும் கத்தியைப் பயன்படுத்தக் கூடாது என்று முன்னாள் பிரதமா் சந்திரசேகா் கூறுவாா். ஆனால் எனக்கு எதிராக அளிக்கப்பட்ட நோட்டீஸ் காய்கறி வெட்டும் கத்தியாகக் கூட இல்லை. அது துருப்பிடித்த கத்தி. அந்த நோட்டீஸ் அவசரகதியில் அளிக்கப்பட்டது.
இங்கு எவரும் பகைமையை தீா்த்துக்கொள்ள செயல்படவில்லை. மக்களாட்சியின் வெற்றிக்கு பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம் மறுக்க முடியாத விஷயங்களாகும்’ என்றாா்.