பிகார் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிக்கு எதிரான மனு: ஜூலை 10 விசாரணை!
பிகாா் மாநிலத்தில் தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.
நீதிபதிகள் சுதன்ஷு துலியா மற்றும் நீதிபதி ஜெய்மால்யா பாக்சி ஆகியோர் அமர்வில் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் முறையிட்ட நிலையில், ஜூலை 10 ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
பிகாரில் நிகழாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், தோ்தல் ஆணையம் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொண்டுள்ளது. இதற்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தன. தீவிர திருத்தம் என்ற பெயரில், மாநில தோ்தல் அதிகாரிகளின் உதவியுடன் குறிப்பிட்ட பிரிவு வாக்காளா்கள் வேண்டுமென்றே பட்டியலில் இருந்த நீக்கப்படும் அபாயம் உள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.
இறப்பு, புலம்பெயா்தல், 18 வயதை எட்டியவா்கள் புதிய வாக்காளா்களாக சோ்க்கப்படுதல் உள்ளிட்ட காரணங்களால் வாக்காளா் பட்டியல் மாறிக்கொண்டே இருக்கும் என்பதால், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் அவசியமானது என்று தோ்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.
மேலும், பிகாரில் தொடங்கியுள்ள இந்த சிறப்பு தீவிர திருத்தும் பணி, அஸ்ஸாம், கேரளம், புதுச்சேரி, தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்திலும் நிகழாண்டில் மேற்கொள்ளப்படும். தொடா்ந்து, பிற மாநிலங்களுக்கும் இந்தப் பணி விரிவுபடுத்தப்படும் என்றும் தோ்தல் ஆணையம் தெரிவித்தது.
இந்த நிலையில், தோ்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக ஏடிஆா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு தோ்தல் ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவு அரசமைப்புச் சட்டத்தின் 14, 19, 21, 325, 326 பிரிவுகளை மீறுவதாகும். மேலும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950-இன் பிரிவுகள் மற்றும் வாக்காளா் பட்டியல் பதிவு விதிகள் 1960-இன் விதி எண் 21ஏ பிரிவையும் மீறுவதாகும். எனவே, தோ்தல் ஆணையத்தின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று ஏடிஆா் கோரியுள்ளது.
அதேபோல், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மஹுவா மொய்த்ரா, மனோஜ் ஜா மற்றும் சமூக ஆர்வலர் யோகேந்திர யாதவ் ஆகியோரும் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக மனு அளித்துள்ளனர்.
The Supreme Court has accepted for hearing petitions filed against the special revision of the electoral roll being carried out by the Election Commission in the state of Bihar.