வன்கொடுமை வழக்குக்குப் பிறகு கொல்கத்தா சட்டக் கல்லூரி இன்று திறப்பு!
மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் சட்டக் கல்லூரி வளாகத்தில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஒரு வாரத்திற்குப் பிறகு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திங்கள்கிழமை மீண்டும் கல்லூரி திறக்கப்பட்டது.
கல்லூரியின் முதலாமாண்டு மாணவி ஒருவர், டி.எம்.சி.யின் மாணவர் பிரிவைச் சேர்ந்த முன்னாள் மாணவர் மற்றும் அவரது இரண்டு மூத்த மாணவர்களால் ஜூன் 25 அன்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த குற்றச்சாட்டில் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பலத்த பாதுகாப்புடன் ஒரு வாரத்திற்குப் பிறகு கல்லூரி இன்று திறக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா காவல்துறையின் மூத்த அதிகாரிகள் வளாகத்தில் பாதுகாப்பை மேற்பார்வையிட்டனர். தனியார் காவலர்கள் உள்ளே செல்லும் மாணவர்களின் அடையாள அட்டைகளை முழுமையாகச் சரிபார்த்தனர்.
கொல்கத்தா காவல்துறை அனுமதி அளித்ததை அடுத்து, நகரின் கல்லூரி வளாகத்தை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டதாகக் கல்லூரி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கல்லூரியின் மாணவர் சங்க அறை மற்றும் பாதுகாப்புக் காவலர் அறை விசாரணைக்காக போலீசாரால் சீல் வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
ஜூலை 8 முதல் மாணவர்கள் தங்கள் வழக்கமான வகுப்பு அட்டவணையைப் பின்பற்றுமாறு கல்லூரி அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.