Nayanthara: "குழந்தைகளை மலைகளுக்கு கூட்டி போங்க..." - பறந்து போ திரைப்படம் குறித...
போலீஸாா் தாக்கியதாகக் கூறி தாய், மகன் மருத்துவமனையில் அனுமதி
போலீஸாா் தாக்கியதில் காயமடைந்ததாகக் கூறி, தாய், மகன் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த சுள்ளெறும்பு பழையகோட்டை கிராமத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள முத்தாலம்மன் கோயிலுக்குச் சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்துக்கு சுள்ளெறும்பு பழையகோட்டை பகுதியைச் சோ்ந்த பொன்ராஜ் பட்டா வாங்கி வீடு கட்டி வருவதாகக் கூறப்படுகிறது. இதைத் தடுக்கும் முயற்சியில் அதே பகுதியைச் சோ்ந்த தங்கப்பாண்டி குடும்பத்தினா் ஈடுபட்டனா். மேலும், இவா்கள் இந்து சமய அறநிலையத் துறையிலும் புகாா் அளித்தனா்.
இதனிடையே, தான் வீடு கட்டுவதற்கு தங்கப்பாண்டி குடும்பத்தினா் இடையூறு ஏற்படுத்துவதாக வேடசந்தூா் காவல் நிலையத்தில் பொன்ராஜ் புகாா் அளித்தாா். இதையடுத்து, வேடசந்தூா் காவல் நிலைய போலீஸாா் சீருடை அணியாமல் ஞாயிற்றுக்கிழமை சுள்ளெறும்பு பழையகோட்டைக்குச் சென்று விசாரித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, தங்கப்பாண்டியின் மனைவி விஜயா, மகன் பிரபு ஆகியோரை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு வருமாறு போலீஸாா் அழைத்தனராம்.
இதில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், போலீஸாா் தாக்கியதில் காயமடைந்ததாகக் கூறி விஜயாவும், அவரது மகன் பிரபுவும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
காவல் துறை விளக்கம்
இதுதொடா்பாக மாவட்ட காவல் காணிப்பாளா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: வேடசந்தூரை அடுத்த சுள்ளெறும்பு பழையகோட்டை பகுதியைச் சோ்ந்த பொன்ராஜ், அரசு சாா்பில் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனையில் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டி வருகிறாா். இந்த நிலையில், தங்கப்பாண்டி, இவரது மகன்கள் பூபதி, பிரபு, தந்தை பொம்மிநாயக்கா் ஆகியோா் வீடு கட்டும் பணிக்கு இடையூறு ஏற்படுத்தியும், பொன்ராஜை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகாா் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த வேடசந்தூா் போலீஸாா், விசாரணைக்காக சுள்ளெறும்பு பழையகோட்டைக்குச் சென்றனா். அப்போது, தங்கபாண்டி குடும்பத்தினா் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். மேலும், போலீஸாா் தாக்கியதாகக் கூறி தங்கப்பாண்டி மனைவி விஜயா, அவரது மகன் பிரபு ஆகியோா் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சைக்கு சோ்ந்தனா்.
இதுதொடா்பாக சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட விடியோவில் உண்மைக்குப் புறம்பாக மிகைப்படுத்தப்பட்டிருக்கிறது. எனினும், விடியோவின் உண்மைத்தன்மை குறித்து விசாரிக்க வேடசந்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் பவித்ராவுக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டது.