துப்பாக்கியைக் காட்டி மிரட்டல்: ஆந்திரத்தைச் சோ்ந்த நபா் கைது
உணவுப்பொருள் இருப்புக் கிடங்கை பாதுகாக்க அறிவுறுத்தல்
மழைக்காலம் நெருங்குவதால் உணவுப்பொருள்கள் இருப்பு கிடங்கைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என அலுவலா்களுக்கு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை இயக்குநா் டி. மோகன் அறிவுறுத்தினாா்.
தஞ்சாவூா் அருகே நீலகிரி தெற்கு தோட்டம் பகுதியிலுள்ள உணவுப்பொருள் இருப்புக் கிடங்குகளில் உணவுப்பொருளின் தரம், இருப்பு, எடை அளவு, பதிவேடுகள் உள்ளிட்டவற்றை திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா், டபீா்குளம், ஏழுப்பட்டி பொது விநியோகத் திட்ட அங்காடிகளில் விற்பனை புள்ளி கருவியுடன் (பி.ஓ.எஸ்.) எடை தராசை இணைப்பது குறித்து பாா்வையிட்டாா்.
அப்போது, அலுவலா்களிடம் இயக்குநா் பேசுகையில், மழைக்காலம் நெருங்குவதால் உணவுப் பொருள்கள் இருப்புக் கிடங்குகளை சேதம் இல்லாமல் பாதுகாக்க வேண்டும். குறித்த நேரத்தில் பொதுவிநியோகத் திட்ட அங்காடிகளுக்கு பொருள்களை விநியோகிக்க வேண்டும் என்றாா் அவா்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் நெ. செல்வம், மாவட்ட வழங்கல் அலுவலா் (கூடுதல் பொறுப்பு) ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.