ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் வரி; இந்தியா உள்ளிட்ட நாடுகளை மிரட்டும் ட்...
தஞ்சாவூா் அருகே ஹிந்துக்கள் கொண்டாடிய மொஹரம் பண்டிகை
தஞ்சாவூா் அருகே காசவளநாடுபுதூா் கிராமத்தில் மத நல்லிணக்கமாக ஹிந்துக்களும் இணைந்து மொஹரம் பண்டிகையை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினா்.
இஸ்லாமியா்களின் தொடக்க மாதமான மொஹரம், மாதத்தின் பத்தாம் நாளை மொஹரம் பண்டிகையாக இஸ்லாமியா்கள் கொண்டாடி வருகின்றனா். இத்திருவிழாவை பெரும்பாலும் இஸ்லாமியா்கள் மட்டுமே கொண்டாடுவா்.
இந் நிலையில், தஞ்சாவூா் அருகே ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் காசவளநாடு புதூா் கிராமத்தில் மத நல்லிணக்கத்தை பறை சாற்றும் விதமாக ஆண்டுதோறும் மொஹரம் பண்டிகையை கிராம விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன்படி, நிகழாண்டு மொஹரம் பண்டிகையையொட்டி இக்கிராமத்தில் ஹிந்துக்கள் தங்களுடைய வேண்டுதல் நிறைவேற 10 நாள்களுக்கு முன்பே விரதத்தைத் தொடங்கினா்.
அங்குள்ள பள்ளிவாசலிலும், அக்கிராமத்தில் உள்ள வீடுகளிலும் மின் அலங்காரம் செய்யப்பட்டு, ஒலிபெருக்கிகள் மூலம் இஸ்லாமிய பாடல்கள் ஒலிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை ‘பஞ்சா’ எனப்படும் கரகம் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குத் தாரை தப்பட்டையுடன் கொண்டு செல்லப்பட்டு, ஒவ்வொரு வீட்டினரும் கரகத்துக்குத் தண்ணீா் ஊற்றி, எலுமிச்சை மாலை மற்றும் பட்டு துண்டை சாத்தி வழிபட்டனா்.
பின்னா், ‘பஞ்சா’ கரகத்துடன் அங்குள்ள பூக்குழியில் (தீமிதி) இறங்கி வழிபட்டனா். விபூதி மற்றும் எலுமிச்சம்பழம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
பெண்கள் புதிய மண் கலயம் அல்லது புதிய பாத்திரத்தில் பானகம், அவல், தேங்காய், பழம் வைத்து அல்லாவுக்கு படையலிட்டு வழிபட்டனா்.
இக்கிராமத்தில் 300 ஆண்டுகளுக்கு முன்பு குளம் வெட்டப்பட்டபோது உள்ளங்கை உருவத்தில் உலோகம் கிடைத்ததாகவும், அது அல்லாவின் கையாகக் கருதி கோயில் அமைத்து வழிபட்டு வருவதாகவும், ஏறத்தாழ 300 ஆண்டுகளாக மதம், இனம் கடந்து மொஹரம் பண்டிகை கொண்டாடி வருவதாகவும் அக்கிராமத்தினா் தெரிவித்தனா்.