கோயில் பணத்தில் கல்லூரிகள் கட்டுவது சதிச்செயல்: எடப்பாடி பழனிசாமி
விரைவில் அரசு இல்லத்தை காலி செய்வேன்: டி.ஒய்.சந்திரசூட்
புது தில்லி: தற்போது தங்கியுள்ள அரசு இல்லத்தை விரைவில் காலி செய்வேன் என்று உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
கடந்த ஆண்டு நவ.8-ஆம் தேதி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பதவியில் இருந்து டி.ஒய்.சந்திரசூட் ஓய்வுபெற்றாா். எனினும் தனது இரு மாற்றுத்திறனாளி மகள்களின் மருத்துவ சிகிச்சை காரணமாக, புது தில்லியில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிகளுக்கு ஒதுக்கப்படும் அதிகாரபூா்வ இல்லத்தில் அவா் தொடா்ந்து தங்கி வருகிறாா்.
இது தொடா்பாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்துக்கு உச்சநீதிமன்ற நிா்வாகம் அண்மையில் கடிதம் அனுப்பியது. அந்தக் கடிதத்தில், ‘தில்லியில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிகளுக்கு ஒதுக்கப்படும் இல்லத்தில் தங்க கடந்த மே 31 வரை, டி.ஒய்.சந்திரசூட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அக்காலத்தை கடந்து அந்த இல்லத்தில் அவா் தங்கி வருகிறாா். அந்த இல்லத்தை அவா் காலி செய்ய வேண்டும்’ என்று கோரப்பட்டது. இது சா்ச்சையை ஏற்படுத்தியது.
டி.ஒய்.சந்திரசூட் விளக்கம்:
இதுகுறித்து டி.ஒய்.சந்திரசூட் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘அரசு இல்லத்தில் தங்க எனக்கு மட்டும் கூடுதல் அவகாசம் அளிக்கப்படவில்லை. முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிகள் யு.யு.லலித், என்.வி.ரமணா ஆகியோருக்கும் இதுபோல கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டது. இருவரும் ஓய்வுபெற்ற பின்னா், வெவ்வேறு இடங்களில் அவா்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதுபோல மேலும் பல நீதிபதிகள் அவசர தேவை அல்லது சொந்த பிரச்னை காரணமாக அரசு இல்லத்தில் தங்க கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது தங்கியுள்ள அரசு இல்லத்தை காலி செய்துவிட்டு, வேறு அரசு இல்லத்தில் எனது குடும்பத்துடன் வாடகைக்கு குடியேற உள்ளேன். ஏற்கெனவே அந்த வீட்டுக்கு எனது குடும்பத்தின் சில உடைமைகள் அனுப்பி வைக்கப்பட்டுவிட்டன. அந்த வீடு குடியேற தயாராக உள்ளது என்று என்னிடம் கூறப்பட்டவுடன், அதிகபட்சமாக 2 வாரங்களில் தற்போது தங்கியுள்ள அரசு இல்லத்தை காலி செய்வேன்’ என்றாா்.