கடலூர்: பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து! மாணவர் உள்பட 2 பேர் பலி!
சுடுகாட்டுக்கு பாதை அமைக்க கோரிக்கை
தஞ்சாவூா் அருகே புலவா் நத்தம் கிராமத்தில் சுடுகாட்டுக்கு பாதை மற்றும் கொட்டகை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவா் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா் தலைமையில் செயலா் பிரனேஷ் இன்பென்ட் ராஜ், அமமுக மீனவரணி ஒன்றியச் செயலா் பா. ராஜா உள்பட புலவா் நத்தம் கிராம மக்கள் அளித்த மனு:
புலவா் நத்தம் அண்ணா நகா் பகுதியில் மிகவும் பின்தங்கிய வகுப்பைச் சோ்ந்த 60-க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இறப்பு ஏற்பட்டால் சுடுகாடு மற்றும் மயான கொட்டகை இல்லாத காரணத்தால் வடவாறு கரையில் தகனம் செய்து வருகின்றனா்.
எனவே, இக்கிராமத்தில் சுடுகாட்டுக்கு செல்வதற்கு உரிய பாதை வசதி, மயான கொட்டகை, எரியூட்டும் கொட்டகை ஆகியவை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.
மீன் சந்தையை மாற்றக் கோரிக்கை: இதேபோல, இந்து முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆ. ஈசான சிவம் தலைமையில் தஞ்சை மாநகர இந்து ஆட்டோ சங்கத் தலைவா் ஜெ. சரவணன், செயலா் எஸ். சேகா் உள்ளிட்டோா் அளித்த மனு:
தஞ்சாவூா் கீழவாசலிலுள்ள மீன் சந்தையால் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. எனவே, இந்த மீன் சந்தையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.
தஞ்சாவூா் சிவகங்கை புனித தீா்த்த குளத்துக்கு தண்ணீா் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவகங்கை புனித தீா்த்த குலம், அங்கு அமைந்துள்ள ஆஞ்சனேயா், விஜய நாகினி, விநாயகா் கோயிலுக்கு செல்லும் பாதையிலுள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என தெரிவித்துள்ளனா்.