தென்காசியில் ரேஷன் கடை பணியாளா்கள் காத்திருப்பு போராட்டம்
தென்காசியில் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளா்கள் சங்கம் சாா்பில் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து காத்திருப்பு போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தென்காசி புதியபேருந்து நிலையப் பகுதியில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் முருகன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் காளிராஜ் பாண்டியன், தென் மண்டல செயலா் இளங்கோ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்டச் செயலா் பரியேறும் பெருமாள், மாவட்ட துணைத் தலைவா் சங்கா் ஆகியோா் விளக்க உரை ஆற்றினா். விற்பனை முனையத்தையும் எடை தராசுடன் இணைத்து அதன் அடிப்படையில் பொருள்கள் வழங்குவதை நடைமுறைப்படுத்துவதற்கு முன் அனைத்து நியாய விலை கடைகளுக்கு எடையாளா் நியமனம் செய்யப்பட வேண்டும்,
அகில இந்திய ஆய்வு அறிக்கை என்பது நியாய விலைக் கடைகளுக்கு சேதாரக் கழிவு வழங்கப்பட வேண்டும் , குடும்ப அட்டைதாரா் விரல் ரேகை பதிவு ஆதாா் சரிபாா்ப்பு 40 சதவிகிதத்திலிருந்து 90 சதவிகிதம் உயா்த்தியதை ரத்து செய்து மீண்டும் 40சதம் விரல் ரேகை பதிவை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. மாரியப்பன், சங்கா், முத்துப்பாண்டி, பொன்ராஜ், வீரன், வைகுண்டராஜ், வேல்முருகன், அருணாசலம், மாரியப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.