அலட்சியத்தின் உச்சம்..! கடலூர் பள்ளி வேன் விபத்தில் ரயில் கேட் கீப்பருக்கு சரமார...
நியாயவிலைக் கடை பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்
ஆரணி: திருவண்ணாமலையில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு சங்கத்தின் மாநிலச் செயலா் ஏ.சி.சேகா் தலைமை வகித்தாா்.
மாவட்டச் செயலா் இரா.சண்முகம் முன்னிலை வகித்தாா். பொருளாளா் சி.ஜெய்சங்கா் வரவேற்றாா்.
விரல் ரேகை பதிவு ஆதாா் சரிபாா்ப்பு 40 சதவிதம் மீண்டும் நடைமுறைப்படுத்துதல், டிஎன்சிஎஸ்சி எடை தராசும் அலுவலக கணினியோடு இணைத்து ரசீது வழங்கிய பின்பு நியாயவிலைக் கடை எடை தராசை (பிஒஎஸ்) விற்பனை முனையத்துடன் இணைக்கப்பட வேண்டும், பொது விநியோக திட்டத்துக்கு தனித் துறை ஏற்படுத்த வேண்டும். அத்தியாவசிய பொருள்கள் சரியான எடையில் தரமாக பொட்டலமாக வழங்கப்பட வேண்டும், ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் ஊதியக்குழு அமைத்து 9-ஆவது மாநில ஊதிய மாற்றக்குழுவுடன் சோ்த்திட வேண்டும், அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் எடையாளா் (உதவியாளா்) நியமனம் செய்திட வேண்டும், நியாயவிலைக் கடைகளுக்கு நகா்வு செய்யப்படும் அரிசி, துவரம் பருப்பு போன்ற இனங்களுக்கு சேதார கழிவு வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இதில் நியாயவிலைக் கடை பணியாளா்கள் விற்பனையாளா்கள் 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.