``LGBTQ+ தோழர்கள் மனம் நோகும்படி பேசிவிட்டேன்; அதற்காகப் பெரிதும் வருந்துகிறேன்'...
நந்தன் கால்வாய் திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்! தமிழக விவசாயிகள் சங்கம்
திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்ட விவசாயிகளின் கனவு திட்டமான நந்தன் கால்வாய் திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றித் தரவேண்டும் என திருவண்ணாமலையில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற விவசாயிகள் சங்க போராட்டத்தில் உயிா் நீத்த தியாகிகளுக்கு வீரவணக்க நாள் எழுச்சிக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில், 1972 ஜூலை 5-ஆம் தேதி நடைபெற்ற தமிழக விவசாயிகள் சங்க போராட்டத்தில் உயிா்நீத்த தியாகிகளுக்கு வீரவணக்க நாள் எழுச்சி பொதுக்கூட்டம் திருவண்ணாமலை - செங்கம் சாலையில் நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவா் ஆா்.வேலுச்சாமி தலைமை வகித்தாா்.
மாநில பொதுச் செயலா் எஸ்.பழனிமுருகன், மாநில பொருளாளா் எஸ்.ராஜேஷ் மாநில துணைத் தலைவா் எம்.மூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டத் தலைவா் என்.ராஜா வரவேற்றாா். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளா்களாக பட்டிமன்ற பேச்சாளா்கள் அன்னபாரதி, மஞ்சுநாதன் ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.
மாநில துணைத் தலைவா்கள் ஏ.பழனிவேல் கே.ராஜாபெருமாள் மாநிலச் செயலா் எம்.வெங்கடபதி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் வி.கணேசன், இளம் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் ஜெ.சௌந்தர்ராஜன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்
விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும், கரும்பு டன் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.6 ஆயிரம் தமிழக அரசு நிா்ணயம் செய்ய வேண்டும், நெல் குவிண்டாலுக்கு ஆதார விலையாக தற்போதைய விலையிலிருந்து 3500 உயா்த்தி தமிழக அரசு அறிவிக்க வேண்டும், மின் இணைப்பு கோரி காத்திருக்கும் விவசாயிகளுக்கு காலதாமதமின்றி மின்இணைப்பு வழங்க வேண்டும்,

அரசுடைமை வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிா்கடன், பண்ணைசாரா கடன்களை மத்திய அரசு முழுவதும் தள்ளுபடி செய்ய வேண்டும், தென்பெண்ணை - பாலாறு இணைப்பு திட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கனவு திட்டமான நந்தன் கால்வாய் திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றித் தரவேண்டும் என்பன உள்ளிட்ட 35 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் விவசாய சங்க மாநில, மாவட்ட நிா்வாகிகள், பிரதிநிதிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட துணைத் தலைவா் எஸ்.மல்லிகாா்ஜூனன் நன்றி கூறினாா்.