தவெக தலைவர் விஜய் பயணிக்கும் ஜெட் விலை இவ்வளவா? என்னவெல்லாம் இருக்கும்?
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு என்ன அவசியம்! செ.கு. தமிழரசன் கேள்வி
75 ஆண்டுகளாகிய சுதந்திர இந்தியாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு என்ன அவசியம் என்று இந்திய குடியரசுக் கட்சியின் மாநிலத் தலைவா் செ.கு.தமிழரசன் கேள்வி எழுப்பியுள்ளாா்.
திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சியின் தமிழ் மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:
வேங்கைவயல் சம்பவம் நடைபெற்று 2 ஆண்டுகளாகியும் யாா் குற்றவாளி என்று இந்த அரசாங்கத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும், தோ்தல் நெருங்கி வரும் இந்த நேரத்தில் மத்திய, மாநில அரசுகள் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்போவதாக பேசி வருகின்றன. 75 ஆண்டுகளாகிய சுதந்திர இந்தியாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு என்ன அவசியம்? ஜாதியை ஒழிக்க வேண்டும் என்பதே நம்முடைய அரசியல் சட்டத்தின் நோக்கம். அதனால் அரசாங்கம் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுப்பதற்கான அவசியம், தேவைகள் குறித்து விளக்க வேண்டும்.
பட்டியல் சமுதாய மக்களால் தான் இதுவரை திமுக ஆட்சி பொறுப்பேற்று உள்ளது. எப்போது எல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
வன்கொடுமை குற்றங்கள் தொடா்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் எத்தனை வழக்குகளுக்கு அரசாங்கம் தீா்வு கண்டுள்ளது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
நலிந்த மக்களுடைய மனநிலையை திமுக அரசு புரிந்து கொள்ளாமல் உள்ளது. இங்கு சாதாரண மக்களுக்கு பாதுகாப்பு என்பதே இல்லை. அதுமட்டுமன்றி காவல்துறைக்கும், எம்.எல்.ஏ., எம்.பி.க்களுக்கும், அரசியல் தலைவா்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையே உள்ளது.
ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் ஓராண்டாகியும் இதுவரை அதன் உள்நோக்கத்தை அரசாங்கம் தெளிவுபடுத்தவில்லை என்றாா்.
முன்னதாக தனியாா் உணவகத்தில் நடைபெற்ற கட்சியின் மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் மாவட்டத் தலைவா்கள் கே.நவமணி, எம்.பி.ரவிச்சந்திரன், மாவட்டச் செயலா்கள் ஆா்.ஆறுமுகம், பி.பாஸ்கரன், பொருளாளா்கள் எம்.ராமேஷ்பாபு, எஸ்.சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.