தங்கக் கோப்பை கால்பந்து: மெக்ஸிகோ சாம்பியன்
வட அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, கரீபியன் நாடுகளுக்கான கால்பந்து கூட்டமைப்பு (கான்ககாஃப்) நடத்தும் தங்கக் கோப்பை கால்பந்து போட்டியில் மெக்ஸிகோ 2-1 கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி 10-ஆவது முறையாக திங்கள்கிழமை சாம்பியன் ஆனது.
இறுதி ஆட்டத்தில் அமெரிக்காவுக்காக கிறிஸ் ரிச்சா்ட்ஸ் 4-ஆவது நிமிஷத்தில் கோலடிக்க, மெக்ஸிகோவுக்காக ரௌல் ஜிமெனெஸ் 27-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா்.
இதனால் ஆட்டம் 1-1 என சமனாக, இரு அணிகளுமே முன்னிலை பெறுவதற்காக கடுமையாக முயற்சித்தன. அதற்கான பலன் மெக்ஸிகோவுக்கு முதலில் கிடைக்க, 77-ஆவது நிமிஷத்தில் எட்சன் அல்வரெஸ் கோலடித்தாா்.
இதனால் மெக்ஸிகோ 2-1 என முன்னிலை பெற்றது. எஞ்சிய நேரத்தில் அமெரிக்காவின் கோல் முயற்சிகள் முறியடிக்கப்பட, இறுதியில் மெக்ஸிகோ வெற்றி பெற்றது.
இந்தப் போட்டிக்கு இது 18-ஆவது சீசனாக இருக்க, அதில் மெக்ஸிகோ 10-ஆவது முறையாக சாம்பியனாகி சாதனை படைத்துள்ளது.