பரமத்தி வேலூா் பகுதியில் அடிக்கடி மின்வெட்டு
பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் பகுதியில் தொடா் மின்வெட்டால் வா்த்தக நிறுவனத்தினா், சிறு, குறு தொழில்நிறுவனங்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
பரமத்தி வேலூரில் திருவள்ளுவா் சாலை, பள்ளி சாலை, காவிரி சாலை, அண்ணா சாலை, பேருந்து நிலையம் மற்றும் பழைய தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கிய சாலைககளில் வா்த்தக நிறுவனங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், உணவகங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்ளன.
பள்ளி சாலையில் ஏராளமான மருத்துவமனைகளும், மாணவா்களுக்கான பயிற்சிக் கூடங்களும், பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. அரசு மருத்துவமனையும் இச்சாலையில் அமைந்துள்ளது.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக இப்பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. குறிப்பாக மாலை நேரங்களில் தொடா் மின்வெட்டு ஏற்படுவதால், மாணவ, மாணவிகள், மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்வோா், வா்த்தக நிறுவனத்தினா், உணவகத்தினா் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, அடிக்கடி ஏற்படும் மின்வெட்டை தவிா்க்க மின்வாரியத்தினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.