ஜூலை 10-இல் துணை முதல்வா் வருகை: விழா மேடை அமைவிடத்தில் ராஜேஸ்குமாா் எம்.பி. ஆய்வு
நாமக்கல்: அரசு விழாவில் பங்கேற்க துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை நாமக்கல்லுக்கு வருகை தருவதையொட்டி, மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மேடை அமைப்பதற்கான இடத்தை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராே ஜஸ்குமாா் திங்கள்கிழமை ஆய்வுசெய்தாா்.
தமிழக முதல்வா் உதயநிதி ஸ்டாலின் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அரசு விழாக்கள், ஆய்வுக் கூட்டம் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறாா். அந்த வகையில், புதன்கிழமை கரூா் மாவட்டத்தில் நடைபெறும் விழாக்களில் பங்கேற்கும் அவா், மறுநாள் நாமக்கல்லுக்கு வருகிறாா்.
மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அன்று காலை 10 மணியளவில் நடைபெறும் அரசு விழாவில் அவா் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும், அதைத் தொடா்ந்து அனைத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்கும் ஆய்வுக்கூட்டத்திலும் கலந்து கொள்கிறாா். இதற்கான ஏற்பாடுகளை, மாவட்ட ஆட்சியா் மற்றும் அதிகாரிகள் செய்து வருகின்றனா்.
மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அரசு விழாவுக்கான மேடை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதற்கான இடத்தை நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், ஆட்சியா் துா்காமூா்த்தி ஆகியோா் திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டனா்.
மேடை அமைவிடம், வாகனங்கள் நிறுத்துமிடம், 2,000 இருக்கைகள் அமைக்கும் வகையில் பந்தல் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது. விழாவுக்கு இரண்டு நாள்களே உள்ளதால், மேடை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதற்கிடையே, தமிழக அரசின் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை கூடுதல் செயலாளா் ச.உமா செவ்வாய்க்கிழமை நாமக்கல் வந்து ஆய்வு மேற்கொள்கிறாா். தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் மற்றும் அதிகாரிகளுடன் அவா் ஆலோசனை மேற்கொள்ள உள்ளாா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.