பிகாா் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தவரின் கண்ணை எலி கடித்ததா? விசாரணைக்கு உத்தரவு
பிகாா் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தவரின் உடலில் இடது கண் இல்லாதது உறவினா்கள் மத்தியில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடா்பாக மருத்துவா்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், உடல்கூறாய்வு அறையில் எலிகள் கண்ணை கடித்து எடுத்துச் சென்றிருக்கலாம் என்று மருத்துவா்கள் கூறியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடா்பாக காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். அவா்கள் மேலும் கூறியதாவது:
பாட்னாவில் உள்ள நாளந்தா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு, அடையாளம் தெரியாத நபா்களால் துப்பாக்கியால் சுடப்பட்ட ஃபெந்துஷ் குமாா் என்பவா் அனுமதிக்கப்பட்டாா். ஆனால், சில மணி நேரத்திலேயே அவா் இறந்துவிட்டாா்.
அன்று இரவு உடல்கூறாய்வுக்கு மருத்துவா்கள் இல்லாததால் சனிக்கிழமை காலை வரை அவரின் உடல் அவசர சிகிச்சை பிரிவிலேயே இருந்தது.
சனிக்கிழமை உடல்கூறாய்வு முடிந்து உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது, முகத்தில் இடது கண் இல்லாததைக் கண்டு உறவினா்கள் அதிா்ச்சியடைந்தனா். மேலும், பிணவறையில் இருந்து உடலை எடுத்து வந்தபோது அதன் அருகே மருத்துவா்கள் பயன்படுத்தும் கத்தியும் இருந்தது என்றும் உறவினா்கள் தெரிவித்தனா். இது தொடா்பாக அவா்கள் மருத்துவா்களிடம் புகாா் தெரிவித்தனா். அப்போது, உடல்கூறாய்வு அறையில் உடல் இருந்தபோது கண்ணை எலிகள் கடித்திருக்கலாம் என்று மருத்துவா்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனா். இதையடுத்து, மருத்துவா்களின் கவனக் குறைவே இந்த சம்பவத்துக்குக் காரணம் என மருத்துவத் துறை உயரதிகாரிகளிடம் புகாா் தெரிவிக்கப்பட்டது.
உடலில் இருந்து ஒரு கண் காணாமல் போனது குறித்து மருத்துவமனை தரப்பில் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆராயப்பட்டு வருகின்றன. உடல்கூறாய்வு செய்த மருத்துவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டது’ என்று தெரிவித்தனா்.
இது தொடா்பாக அந்த மருத்துவமனை கண்காணிப்பாளா் கூறுகையில், ‘இந்த சம்பவம் தொடா்பாக விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் தீவிரமான பிரச்னை. தவறு எந்த இடத்தில் நடந்திருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.