பியூன் வேலை: பிஎச்டி, எம்பிஏ உள்பட 24.76 லட்சம் இளைஞர்கள் விண்ணப்பம்!
ராஜஸ்தான் மாநிலத்தில், பியூன் வேலைக்கு, பிஎச்டி, எம்பிஏ, சட்டம் படித்த இளைஞர்கள் என 24.76 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் முழுக்க பல்வேறு அலுவலகங்களில் காலியாக இருந்த 53,749 பியூன் காலிப் பணியிடங்களுக்கு சுமார் 24.76 லட்சம் விண்ணப்பங்கள் வந்திருந்தது, மாநிலத்தில் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இந்தியாவிலும் வேலையில்லாத் திண்டாட்டம் எந்த அளவில் இருக்கிறது என்பதை நிரூபிப்பதாக எதிர்க்கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் கவலை தெரிவித்திருக்கிறார்கள்.
யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகி வரும் இளைஞர்களும், சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றவர்கள் உள்பட பியூன் வேலைக்கான கல்வித் தகுதியைக் காட்டிலும் அதிக தகுதி பெற்ற இளைஞர்களும் இந்த வேலைக்கு விண்ணப்பித்திருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பல ஆண்டுகாலமாக யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகி வருவதாகவும், வெற்றி பெறாததால், கிடைத்த வேலையை செய்யலாம் என்றுக் கருதியே பல இளைஞர்கள் பியூன் வேலைக்கு விண்ணப்பித்ததாகவும், வேலை இல்லாமல் பெற்றோரை எதிர்பார்த்து இருப்பதைக் காட்டிலும் இது மேலானது என்றே பலரும் கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
அது மட்டுமல்லாமல், இணையதளம் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கும்போது, ஒரே நேரத்தில் ஏராளமானவர்கள் விண்ணப்பித்ததால், இணையதளம் முடங்கியதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் இதற்கான விண்ணப்பங்கள் தொடங்கிய நிலையில், தற்போது விண்ணப்பித்த இளைஞர்களின் கல்வித் தகுதிகள் வெளியாகி பேசுபொருளாகியிருக்கிறது.
An issue has come to light in which 24.76 lakh people, including PhD, MBA, and law graduates, had applied for the job of a peon in the state of Rajasthan.