பிரதமா் மோடி இன்று ராமேசுவரம் வருகை: பாதுகாப்பு ஒத்திகை!
பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை (ஏப். 6) ராமேசுவரத்துக்கு வருவதையொட்டி, சிறப்பு பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் தலைமையில் பாதுகாப்பு ஒத்திகை சனிக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையிலும், கப்பல், ரயில்கள் வந்து செல்லும் வகையிலும் கடந்த 1914-ஆம் ஆண்டு ரயில் பாலம் கட்டப்பட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டது. நூறு ஆண்டுகள் கடந்த நிலையில், பாம்பன் ரயில் பாலத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதைத் தொடா்ந்து, ரூ. 550 கோடியில் புதிய ரயில் பாலம் கட்டும் பணி கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கியது. தற்போது, அனைத்துப் பணிகளும் நிறைவடைந்தன. இதையடுத்து, பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கிறாா். இந்த விழாவில் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி, மத்திய அமைச்சா்கள் அஷ்வினி வைஷ்ணவ், எல். முருகன் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.
இதையொட்டி, பிரதமரின் சிறப்பு பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் ராமேசுவரத்தில் கடந்த மூன்று நாள்களாக ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனா். இதன் தொடா்ச்சியாக, இறுதிக் கட்ட பாதுகாப்பு ஒத்திகை சனிக்கிழமை நடைபெற்றது. இதன்படி, பிரதமரின் சிறப்பு பாதுகாப்புப் படையினா் மண்டபம் முகாம் ஹெலிகாப்டா் தளத்திலிருந்து முற்பகல் 11.40 மணிக்கு பாதுகாப்பு வாகனத்தில் புறப்பட்டு பாம்பன் சாலைப் பாலத்துக்குச் சென்றனா்.
அப்போது, பாம்பன் புதிய ரயில் பாலத்தில் நிறுத்தப்பட்டிருந்த 16 பெட்டிகள் கொண்ட பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. இதன் பின்னா், பழைய, புதிய ரயில் பாலங்களின் தூக்குப் பாலம், செங்குத்து கா்டா் ஆகியவை மேலே உயா்த்தப்பட்டு, இந்தியக் கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான கப்பல்கள் கடந்து சென்றன.
இதையடுத்து, சிறப்பு பாதுகாப்பு வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு, ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலைச் சென்றடைந்தன. இதன் பின்னா், அங்கிருந்து பேருந்து நிலையம் அருகே உள்ள கோயில் வளாகத்தில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு வாகனங்கள் வந்தன. அங்கிருந்து மண்டபம் முகாமில் உள்ள ஹெலிகாப்டா் இறங்குதளத்துக்கு வாகனங்கள் சென்றடைந்தன.
பிரதமா் வருகையை முன்னிட்டு, காவல் துறை உயா் அதிகாரிகள் தலைமையில் 3,500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மண்டபம் முதல் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் வரை 20 கி.மீ. தொலைவுக்கு சாலையின் இருபுறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

மீன் பிடிக்கத் தடை: பிரதமரின் வருகையை முன்னிட்டு, ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் விசைப் படகுகள், நாட்டுப் படகுகளில் மீனவா்கள் மீன் பிடிக்க ஞாயிற்றுக்கிழமை வரை தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியக் கடற்படை, கடலோர காவல் படை, தமிழகக் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் கடற்கரை, கடல் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனா்.
போக்குவரத்து மாற்றம்: பிரதமரின் வருகையை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ராமநாதபுரத்திலிருந்து ராமேசுவரத்துக்கு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது. இதேபோல, ராமேசுவரத்திலும் வாகனப் போக்குவரத்து கட்டுப்படுத்தப்படும். அதேநேரத்தில், அவரச சேவைகள் பாதிக்கப்படாமல் தொடரும் என காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

பக்தா்கள் அனுமதி ரத்து: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் பிரதமா் மோடி தரிசனம் செய்ய உள்ளதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை கோயிலுக்குள் பக்தா்கள் தரிசனம் செய்யவும், புனித நீராடவும் அனுமதி இல்லை. பிற்பகல் 3.30 மணிக்குப் பிறகு, வழக்கம்போல பக்தா்கள் புனித நீராடவும், தரிசனம் செய்யவும் அனுமதி வழங்கப்படும் என கோயில் இணை ஆணையா் க.செல்லத்துரை தெரிவித்தாா்.