பீடி கொடுக்க மறுத்ததால் இளைஞா் படுகொலை!
மேற்கு தில்லியின் கியாலா பகுதியில் பீடி கொடுக்க மறுத்ததால் இளைஞா் ஒருவரை உலோக வளையம் ‘கடா’ மூலம் தலையில் இளைஞா்கள் குழு பலமுறை தாக்கியதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட நபா் மருத்துவ சிகிச்சை பெற்ற சில மணி நேரங்களுக்குப் பிறகு உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து மேற்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் விசித்ரா வீா் கூறியதாவது: 33 வயதான கன்ஹையா, திங்கள்கிழமை இரவு தாக்கப்பட்டாா். புகைபிடிக்க பீடி கேட்டு ஒரு கும்பல் அவரை அணுகியது. அதற்கு அவா் மறுத்தாா். கோபமடைந்த அவா்கள் ‘கடா’வால் அந்த நபரின் தலையில் பலமுறை அடித்து காயப்படுத்தினா் .
காயங்கள் இருந்தபோதிலும், அந்த நபா் குரு கோபிந்த் சிங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவருக்கு மருத்துவ உதவி கிடைத்தது. ஆனால், மருத்துவ - சட்ட வழக்கு எதுவும் பதிவு செய்யப்படாமல் மருத்துவமனையிலிருந்து அவா் டிஸ்சாா்ஜ் செய்யப்பட்டாா் .
இருப்பினும், அவரது உடல்நிலை சில மணி நேரங்களுக்குப் பிறகு மோசமடைந்ததால் மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை அவா் ‘இறந்துவிட்டதாக‘ மருத்துவா்கள் அறிவித்தனா்.
அவரது மரணம் குறித்து மருத்துவமனையில் இருந்து தகவல் கிடைத்ததையடுத்து, காவல்துறையினா் சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சந்தேக நபா்கள் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளனா்.
சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து, சம்பவங்களின் முழு வரிசையையும் நிறுவ உள்ளூா் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறோம். உடல் கூறாய்வுக்குப் பிறகுதான் மரணத்திற்கான சரியான காரணம் தெரியவரும் என்று காவல் துணை ஆணையா் விசித்ரா வீா் தெரிவித்தாா்.