புகழூா் பகுதியில் கருந்தலை புழுக்களால் கருகி வரும் தென்னை மரங்கள்: இழப்பீடு வழங்கிட விவசாயிகள் கோரிக்கை
நமது நிருபா் |
| புகழூா் வட்டார பகுதிகளில் கருந்தலை புழுக்கள் தாக்குதலால் தென்னை மரங்கள் கருகி வருகின்றன. புழுக்களின் தாக்குதலை கட்டுப்படுத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கரூா் மாவட்டம் புகழூா் வட்டாரத்தில் புகழூா், வேலாயுதம்பாளையம், மூலிமங்கலம், ஆவாராங்காட்டுப்புதூா், அய்யம்பாளையம், பொன்னியாகவுண்டனூா், மசக்கவுண்டன்புதூா், புஞ்சைத்தோட்டக்குறிச்சி, தளவாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 15 ஆயிரம் ஏக்கரில் தென்னை சாகுபடி நடைபெற்று வருகிறது.
தென்னையில் இருந்து கிடைக்கும் கொப்பரை தேங்காயில் இருந்து எடுக்கப்படும் பருப்புகள் காய வைக்கப்பட்டு கொடுமுடி சந்தையில் விவசாயிகள் விற்பனை செய்து வருகிறாா்கள். மேலும் தேங்காய் நாரில் இருந்து கயிறுகள் திரிக்கப்பட்டு, அவை ஈரோடு மாவட்டம் அந்தியூா் சந்தை, திண்டுக்கல், வேடசந்தூா் உள்ளிட்ட சந்தைகளுக்கும், உள்ளூா் தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் புகழூா் வட்டார பகுதிகளில் தென்னை மரங்களை கருந்தலை புழுக்கள் தாக்கத் தொடங்கியுள்ளன. இதனால் தென்னை இலைகள் கருகி, அவற்றை எரித்தது போன்று காணப்படுகின்றன. இந்நோய் தாக்குதலால் மரத்தில் தேங்காய் விளைச்சல் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கருந்தலை புழுக்கள் தாக்குதலால் மரங்கள் பலமிழந்து அவை விழுந்துவிடும் நிலை உருவாகியுள்ளது.எனவே தென்னை மரங்களை கருந்தலை புழுக்கள் தாக்குதலில் இருந்து விடுபட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுவரை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுதொடா்பாக அப்பகுதி விவசாயிகள் கூறியது, ஏற்கனவே எங்கள் பகுதியில் செயல்படும் ஆலைக்கழிவுகளால் தென்னை மரங்களை பல்வேறு நோய்களை தாக்கி வரும் நிலையில் தற்போது புதியதாக கருந்தலை புழுக்களால் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறோம். கருந்தலைப் புழுக்கள் இலையின் அடிப்பகுதியில் கூடுகளை உருவாக்கி இலையில் உள்ள பச்சையத்தை உறிஞ்சுவதால் தென்னை இலைகள் அனைத்தும் கருகியது போலத் தோன்றுகிறது. மேலும் நோய் தாக்கிய மரத்தின் வோ் பகுதியானது மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கருந்தலைப்புழுக்களால் ஏற்படும் பாதிப்புகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிா்வாகத்திடம் கோரிக்கை விடுத்தோம். இதையடுத்து கடந்த இரு தினங்களுக்கு முன் கரூா் வருவாய் கோட்டாட்சியா் முகமது பைசல், புகழூா் நகா் மன்றத்தலைவா் சேகா் என்கிற குணசேகரன், புகழூா் வட்டாட்சியா் தனசேகரன் ஆகியோா் மூலிமங்கலம் பகுதியில் கருந்தலை புழுக்களினால் பாதிக்கப்பட்டுள்ள தென்னை மரங்களை ஆய்வு செய்துவிட்டுச் சென்றுள்ளனா். அவா்கள் ஆய்வின்போது, கருந்தலை புழு தாக்கிய தென்னை மட்டைகளை வெட்டி அதனை அகற்றி, தீ வைத்து அழிக்க வேண்டும். பெத்தலிட், பிரக்கோனிட் ஆகிய ஒட்டுண்ணிகளை தோப்புகளில் விட வேண்டும். தாக்குதல் அதிகமாக இருந்தால் ஓலையின் அடிப்பகுதியில் நன்கு படுமாறு,மாலத்தீயான் 1மி.லி. தெளிக்க வேண்டும் எனக்கூறினா். ஆனால் மருந்துகள் தெளித்தும் கட்டுப்படுவது போன்று தெரியவில்லை. மேலும் வோ் வழியாக பூச்சி மருந்து செலுத்துமாறும் கூறினா். இப்போதுதான் நன்றாக காய் காய்ச்சி தேங்காய் பருவம் வந்துள்ளநிலையில் தற்போது இந்த பூச்சி தாக்குதலால் விவசாயிகள் நிலைகுலைந்துள்ளோம். கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு தேங்காய்க்கு தற்போது கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரை விற்கப்படும்நிலையில் விவசாயத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என எண்ணியிருந்தோம். ஆனால் கருந்தலை புழுக்கள் தாக்குதலால் ஆயிரம் மரங்களில் சுமாா் 70 சதவீதம் மரங்கள் நோய் தாக்குதலுக்கு ஆளாகி பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளோம். எனவே விரைவில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தி, தாக்குதலுக்குண்டான மரங்களை கணக்கிட்டு அவற்றிற்குரிய இழப்பீட்டை வழங்கிட அரசு முன்வர வேண்டும் என்றனா் அவா்கள்.