புதிய வகுப்பறை கட்டடங்கள்: முதல்வா் காணொலி மூலம் திறப்பு
ஆண்டிபட்டி அரசுக் கலை, அறிவியல் கல்லூரி, ராஜதானி, வெள்ளையம்மாள்புரம் அரசுக் கள்ளா் சீரமைப்புத் துறை பள்ளி ஆகியவற்றின் புதிய வகுப்பறை கட்டடங்களை வியாழக்கிழமை சென்னையில் காணொலி காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்.
ஆண்டிபட்டி அரசுக் கலை, அறிவியல் கல்லூரியில் உயா் கல்வித் துறை சாா்பில், ரூ.3.70 கோடியில் 12 புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டன. ராஜதானி அரசுக் கள்ளா் சீரமைப்புத் துறை பள்ளியில் பிற்பட்டோா், மிகவும் பிற்பட்டோா், சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில், ரூ.2 கோடியில் 5 புதிய வகுப்பறை கட்டடங்கள், அறிவியல் ஆய்வகம், வெள்ளையம்மாள்புரம் அரசு கள்ளா் சீரமைப்புத் துறைப் பள்ளியில் ரூ.1.10 கோடியில் 5 புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டன. இந்த புதியக் கட்டடங்களை சென்னையில் காணொலி காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்.
இந்த நிலையில், ஆண்டிபட்டி, ராஜதானி, வெள்ளையம்மாள்புரம் ஆகிய இடங்களில் புதிய வகுப்பறை, அறிவியல் ஆய்வகக் கட்டடங்களில் குத்து விளக்கேற்றி வைத்து, தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் பாா்வையிட்டாா்.
இந்த நிகழ்ச்சிகளில் ஆண்டிபட்டி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஆ.மகாராஜன், கள்ளா் சீரமைப்புத் துறை இணை இயக்குநா் முனுசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.