`புது தேசியக் கல்விக் கொள்கையை செயல்படுத்துவதில் உறுதி...' - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
புதிய தேசியக் கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாடு அரசுக்கு கல்வி நிதி ஒதுக்கப்படாது எனக் காட்டமாக தெரிவித்திருக்கும் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் கருத்து, தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. புதியக் கல்விக் கொள்கை இந்தியை திணிக்கிறது, குலக் கல்வியை ஆதரிக்கிறது, மூன்றாம், ஐந்தாம், எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வை நடத்தக் கட்டாயப்படுத்துகிறது, தொழிற்கல்விக்கு வழிகாட்டுகிறது உள்ளிட்ட விமர்சனங்களுக்கு உள்ளானது. அதனால், புதியக் கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்காது என உறுதியாக மறுத்து வருகிறது தி.மு.க.

இதற்கிடையில்தான் மத்திய கல்வித்துறை அமைச்சரின் கருத்துகள் சர்ச்சையானது. இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், ``மாணவர்களிடையே போட்டியை உருவாக்க, ஒரு சமமான நிலையை உருவாக்க, நாம் ஒரு பொதுவான தளத்திற்கு வர வேண்டும். தேசியக் கல்விக் கொள்கை என்பது புதிய லட்சிய பொது தளமாகும். நான் அனைத்து மொழிகளையும் மதிக்கிறேன். பிரதமர் மோடியால் கற்பனை செய்யப்பட்ட இந்த தேசியக் கல்விக் கொள்கை, தாய்மொழிக்கு முக்கியத்துவமளிக்கிறது. தமிழ் நமது நாகரிகத்தின் பழமையான மொழிகளில் ஒன்றாகும்.
ஆனால் தமிழ்நாட்டில் ஒரு மாணவர் கல்வியில் பன்மொழி அம்சத்தைக் கற்றுக்கொண்டால் என்ன தவறு? அது தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளாக இருக்கலாம். அவர்கள் மீது இந்தி அல்லது வேறு எந்த மொழியையும் திணிக்க முடியாது. தமிழ்நாட்டில் சில நண்பர்கள் அரசியல் செய்கிறார்கள். ஆனால் இந்திய அரசு தேசியக் கல்விக் கொள்கையை செயல்படுத்த உறுதியாக இருக்கிறது" என்றார்.