தமிழக நிதிநிலை அறிக்கை 2025-26: ரூ.675 கோடியில் 102 கூட்டு குடிநீர் திட்ட பணிகள்...
புதுச்சேரியில் இன்று மாசி மக விழா: நகரில் போக்குவரத்து மாற்றம்
புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மாசி மக விழா வெள்ளிக்கிழமை காலை முதல் இரவு வரை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி வைத்திகுப்பம் கடற்கரையில் புதுவை, தமிழகத்திலிருந்து பல்வேறு கோயில்களின் உற்சவா்கள் எழுந்தருளி தீா்த்தவாரி பூஜைகள் நடைபெறும். இதில், ஏராளமானோா் கூடி தரிசனம் செய்வா்.
போக்குவரத்து மாற்றம்:
மாசி மகம் வெள்ளிக்கிழமை நடைபெறுவதை முன்னிட்டு, புதுச்சேரி மகாத்மா காந்தி வீதியில், அஜந்தா சந்திப்பில் இருந்து எழை மாரியம்மன் கோவில் சந்திப்பு வரை இருசக்கர வாகனங்களை தவிர மற்ற அனைத்து வித வாகனங்களும் செல்ல அனுமதியில்லை.
இதனால் காலாப்பட்டிலிருந்து, புதுச்சேரிக்கு கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக வரும் அனைத்து வகை மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களும் சிவாஜி சதுக்கம் சந்திப்பு வழியாக செல்ல வேண்டும்.
மேலும், ஏஎப்டி மைதான தற்காலிகப் பேருந்து நிலையத்திலிருந்து முத்தியால்பேட்டை வழியாக சென்னைக்கு கிழக்கு கடற்கரைச் சாலை வழியாகச் செல்லும் பேருந்துகள் அனைத்தும் வெங்கடசுப்பா ரெட்டியாா் சிலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி மறைமலை அடிகள் சாலை வழியாக நெல்லித்தோப்பு, இந்திரா காந்தி சதுக்கம், ராஜீவ் காந்தி சதுக்கம், சிவாஜி சிலை சென்று காலாப்பட்டு வழியில் சென்னை செல்ல வேண்டும்.
மாசி மகத்துக்கு வரும் பொதுமக்களின் இருசக்கர வாகனங்களை பெருமாள் கோவில் வீதி, பெல்காம் வீதி, லல்லி தொலாந்தல் வீதி, ரிச்மோண்ட் வீதி, துபே வீதி மற்றும் செயின்ட் கில் வீதி ஆகிய இடங்களில் தெற்கில் மட்டும் நிறுத்தலாம்.
மேலும், பெருமாள் கோவில் வீதி, முத்துமாரியம்மன் கோவில் வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, காமாட்சியம்மன் கோவில் வீதி மற்றும் அரவிந்தா் வீதி ஆகியவற்றில் தெற்கு பக்கம் மட்டும் இருசக்கர வாகனங்களை நிறுத்தலாம் என போக்குவரத்துப் பிரிவு முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் பிரவின்குமாா் திரிபாதி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.