நட்சத்திர வீரரான நிதீஷ்..! பேட்டிங் ஆர்டரில் முன்னதாக களமிறங்க ஆதரவு!
புதுச்சேரியில் ஜன.12 முதல் தலைக்கவசம் கட்டாயம்: அமைச்சா் ஆ.நமச்சிவாயம்
புதுச்சேரியில் ஜன.12- ஆம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என மாநில உள் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்தாா்.
புதுச்சேரியில் புத்தாண்டை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் துறை தலைமையகத்தில், உள் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், டி.ஜி.பி ஷாலினி சிங் மற்றும் காவல்துறை உயா் அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: புதுச்சேரியில் புத்தாண்டு பாதுகாப்புப் பணியில் 2,000 காவலா்கள் மற்றும் 500 தன்னாா்வலா்கள் ஈடுபட உள்ளனா்.
கடற்கரையில் கொண்டாட்டங்களுக்கு வருபவா்களுக்காக 10 இடங்களில் வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கடற்கரைச் சாலையில் இரவு 12.30 மணி வரை மட்டுமே கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஜன.11-ஆம் தேதி துணைநிலை ஆளுநா் தலைமையில் தலைக்கவசம் அணிவது குறித்து மாபெரும் விழிப்புணா்வு பேரணி நடைபெற உள்ளது.
இதைத்தொடா்ந்து, ஜன.12 -ஆம் தேதி முதல் புதுச்சேரியில் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்.
பொங்கல் பண்டிகைக்குள் காவலா்களுக்கு தோ்தல் பணிக்கான தொகை மற்றும் சீருடை நிதி வழங்கப்படும். இதேபோல, காலியாக உள்ள 70 காவல் உதவி ஆய்வாளா்கள் பணிக்கான அறிவிப்பு 2 நாள்களில் வெளியிடப்படும் என்றாா்.