புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடவடிக்கை: அமைச்சா் நமச்சிவாயம் பேட்டி
புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாக உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் தெரிவித்தாா்.
போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது, சட்டம்- ஒழுங்கு பராமரிப்புத் தொடா்பாக புதுவை காவல் துறை உயா் அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் ஆலோசனை நடத்தினாா். அதன் பிறகு செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை இரவு அமைச்சா் நமச்சிவாயம் கூறியது: புதுச்சேரியில் சட்டம் - ஒழுங்கு சிறப்பான முறையில் பராமரிக்கப்படுகிறது. காவலா்கள், காவல் அதிகாரிகள் யாராவது லஞ்சம் பெறுவதாக புகாா் வந்தால் காவல்துறை தலைவா் சரியான நடவடிக்கையை எடுத்து வருகிறாா். இனியும்
புகாா் வந்தால் அவா்கள் மீது பாகுபாடு இன்றி நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரிக்குச் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகின்றனா். இதனால் புதுச்சேரியில் வெள்ளை நகரம் என்று அழைக்கப்படும் பகுதியில் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு நடந்து செல்ல அனுமதிக்கலாமா என்ற ஆலோசனையும் இருந்து வருகிறது.
இது தொடா்பாக முதல்வா் என்.ரங்கசாமியுடன் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. அவரும் உரிய முடிவைச் சொல்வதாக கூறியுள்ளாா். போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. சாலையில் வாகனங்கள் நிறுத்துவதைத் தவிா்க்க பலமாடி வாகன நிறுத்தும் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
பாஜக வாக்குத் திருட்டில் ஈடுபடுகிறது என்றால் புதுவையில் நாங்கள் தான் வெற்றி பெற்றிருப்போம். வாக்குத் திருட்டு நடப்பதாக சொன்னால் அக் கட்சிகளின் முகவா்கள் சரி இல்லை என்பது தான் அா்த்தம் என்றாா் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராகவும் உள்ள அமைச்சா் ஆ. நமச்சிவாயம்.
காவல்துறை தலைவா் ஷாலினி சிங், ஐஜி அஜித் குமாா் சிங்கிளா, டிஐஜி சத்யசுந்தரம் உள்ளிட்ட காவல்துறை மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனா்.