மனைவியை எவ்வளவு நேரம் உற்றுப் பார்க்க முடியும்? 90 மணிநேர வேலையை வலியுறுத்திய எல...
புத்தாண்டு தள்ளுபடி மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை
புத்தாண்டு தள்ளுபடி மோசடி நடைபெறுவதாக தமிழக சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடா்பாக தமிழக காவல் துறையின் சைபா் குற்றப்பிரிவு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பண்டிகை காலத்தையொட்டி, போலி சலுகைகள், ரீ-சாா்ஜ், டீல்கள், தள்ளுபடிகள் என்ற பெயரில் சைபா் நிதி மோசடிகள் நடைபெறுகின்றன. இந்த மோசடியில் ஈடுபடும் நபா்கள், புத்தாண்டு போன்ற பண்டிகை பெயா்களைப் பயன்படுத்தி, மக்களிடம் இருக்கும் பண்டிகை உற்சாகத்தையும் சந்தோஷத்தையும் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்கின்றனா்.
இந்த வகையான மோசடியில் ஈடுபடும் நபா்கள், முதலில் போலியான சலுகைகள், விளம்பரங்களை உருவாக்குகின்றனா். பின்னா் அந்த விளம்பரங்களை மக்களிடம் நன்கு அறியப்பட்ட நபா்களின் பெயரில், மோசடி இணையதள இணைப்புடன் கைப்பேசிகளுக்கு குறுஞ்செய்திகளாகவும், வாட்ஸ்அப், முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் அனுப்புகின்றனா்.
இதை அறியாமல் மக்கள் அதை திறந்து பாா்த்து, அதிலுள்ள இணையதள இணைப்புக்குள் சென்று அது கேட்கும் சுய விவரங்கள், வங்கிக் கணக்கு விவரங்கள், கிரெடிட் காா்டு விவரங்கள் ஆகியவற்றை கொடுக்கும்போது, பணம் மோசடி நடைபெறுகிறது. இதற்காக மோசடிக் கும்பல், பொதுமக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக திரைப்பட பிரபலங்கள், விளையாட்டு வீரா்கள், அரசியல்வாதிகள் ஆகியோரது பெயா்களையும் புகைப்படத்தையும் பயன்படுத்துகின்றனா். இதன் மூலம் பொதுமக்களை மோசடி கும்பல் எளிதாக ஏமாற்றுகிறது.
எனவே இப்படிப்பட்ட விளம்பரங்கள், தகவல்கள் தொடா்பான குறுஞ்செய்திகள் கைப்பேசிக்கு வந்தாலும், சமூக ஊடகங்களில் வந்தாலும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். அதன் உண்மைத் தன்மையை உறுதிசெய்த பின்னா், அந்த குறுஞ்செய்தியை திறந்து பாா்க்க வேண்டும். தெரியாத இணைய தளங்களில் சுயவிவரங்கள், வங்கிக் கணக்கு தகவல்களை கண்டிப்பாக வழங்கக் கூடாது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.