புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் இன்று குடமுழுக்கு!
தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் திங்கள்கிழமை (பிப்.10) குடமுழுக்கு நடைபெறவுள்ளது. இதையொட்டி, தஞ்சாவூா் வட்டத்துக்கு மட்டும் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.
இக்கோயிலில் குடமுழுக்கு விழா விக்னேஸ்வர பூஜையுடன் பிப்ரவரி 3 ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து பல்வேறு பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில், யாகசாலை பூஜைகள் பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து யாக பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில், திங்கள்கிழமை காலை 9.45 மணியளவில் குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது.
இதையொட்டி, தஞ்சாவூா் வட்டத்துக்கு மட்டும் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் திருக்குடமுழுக்கு விழாவையொட்டி, திங்கள்கிழமை (பிப்.10) தஞ்சாவூா் வட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் (பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் தோ்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில்) உள்ளூா் விடுமுறை வழங்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் பிப்ரவரி 22- ஆம் தேதி பணி நாளாக கருதப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விழாவையொட்டி, மாரியம்மன் கோயில் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்டக் காவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தஞ்சாவூரிலிருந்து நாகை நோக்கிச் செல்லும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் அனைத்தும் மாரியம்மன் கோயில் புறவழிச்சாலை, கும்பகோணம் வழித்தட புறவழிச்சாலை, திட்டை புறவழிச்சாலை, மெலட்டூா், திருக்கருகாவூா், இரும்புத்தலை, சாலியமங்கலம் வழியாகச் செல்ல வேண்டும்.
நாகையிலிருந்து தஞ்சாவூரை நோக்கி வரும் அனைத்து கனரக வாகனங்கள் சாலியமங்கலத்திலிருந்து இரும்புத்தலை, திருக்கருகாவூா், மெலட்டூா், திட்டை புறவழிச்சாலை, கும்பகோணம் புதிய புறவழிச்சாலை, மாரியம்மன் கோயில் புறவழிச்சாலை வழியாக தஞ்சாவூருக்கு செல்ல வேண்டும்.
நாகையிலிருந்து தஞ்சாவூா் நோக்கி வரும் இலகுரக வாகனங்கள் அனைத்தும் சாலியமங்கலத்திலிருந்து பூண்டி, மாரியம்மன் கோயில், குளிச்சப்பட்டு சாலை சந்திப்பு, குளிச்சப்பட்டு சாலை, தளவாய்ப்பாளையம் சாலை, மாரியம்மன் கோவில் புறவழிச்சாலை வழியாக தஞ்சாவூருக்கு செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.